அதிமுக - பாஜக ரகசிய டீலிங்.. அதிராம்பட்டினம் பள்ளி விவகாரத்தில் அவசரம் வேண்டாம்! பீட்டர் அல்போன்ஸ்
தஞ்சாவூர்: அதிமுகவும் பாஜகவும் ரகசிய கூட்டணி வைத்து இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
கேள்வி: அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறித்து இருக்கிறார்கள். இதற்கு முந்தைய தேர்தல்களில் அதிமுகவின் தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணியும் காரணமாக சொல்லப்பட்டது. தற்போது பாஜக கூட்டணியில் இல்லாததால் வழக்கமாக திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வரக்கூடிய சிறுபான்மையின வாக்குகள் பிரியும் வாய்ப்பு உள்ளதா?

பதில்: எடப்பாடி தலைமையிலான அதிமுகவை ஒரு மதச்சார்பற்ற கட்சி என்று ஏற்றுக்கொள்ளவே முடியாது. இன்று கூட மோடியை பற்றியோ, அவரது நடவடிக்கை பற்றியோ நேரடியாக விமர்சனம் செய்வதற்கு பழனிசாமி தயாராக இல்லை. இப்படிப்பட்ட நிலையில் இந்த தேர்தலுக்காக சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை குறிவைத்து நாடகமாடுகிறார்கள். ஏற்கனவே பாஜகவும் பழனிசாமியும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அவர் வெளியேறி இருக்கிறார் என்று சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறேன்.
ஏனெனில் இன்று எல்லோர் மீதும் பாய்கின்ற அமலாக்கத்துறை பழனிசாமி மீதும் அவரோடு இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் மீதும் பாயவில்லை. ஏன் அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை? அவர்கள் எல்லோருமே விசாரணை வளையத்தில் உள்ளார்கள். வேலுமணியை போன்றவர்கள், தங்கமணியை போன்றவர்கள், விஜயபாஸ்கரை போன்றவர்கள், ஏன் எடப்பாடி பழனிசாமியை போன்றவர்கள் மீது ஏன் ஆளுநர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி வழங்க மறுக்கிறார்? அப்போது இவர்களுக்கு இடையே கள்ளத்தனமான கூட்டணி உள்ளது.
இதையெல்லாம் சிறுபான்மை மக்கள் நம்புவார்கள் என்று நினைத்தால் அவர்கள் ஏமாந்துபோவார்கள். சிறுபான்மை மக்களுக்கு பழனிசாமியின் உண்மையான நிறம் என்ன என்று தெரியும். தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் எந்த விதமான சதித் திட்டத்தை மனதில் வைத்து இருக்கிறார் என்று மக்களுக்கு தெரியும். திமுக தலைமையிலான கூட்டணி என்பது முயற்சி செய்யப்பட்ட, பரிசோதனை செய்யப்பட்ட, நம்பிக்கையான கூட்டணி.
ஏற்கனவே பல தேர்தல்களில் பரிசோதிக்கப்பட்டு, தேர்தலுக்கு பின்னால் உள்ள நடைமுறைகளிலும் பரிசோதிக்கப்பட்டு, இந்த பாசிச அரசிற்கு எதிரான அரசியல் நிலைபாட்டை உறுதியோடு எடுப்பதிலே திமுகவையும் பலமுறை பரிசோதித்துவிட்டுதான் அவர்களோடு கூட்டு சேர்ந்து இருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு இயக்கங்கள், சிறுபான்மை மக்கள் நலனை முன்னெடுக்கும் இஸ்லாமிய கட்சிகள், தலித் கட்சிகள் எல்லோரும் அந்த அளவில்தான் ஒன்றுபட்டு இருக்கிறோம். ஆகவே இந்த அணி நிச்சயமாக வெற்றி பெறும்.
கேள்வி: அதிராம்பட்டினத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாபி பள்ளி இட விவகாரம் மாநில அளவில் பேசு பொருளாக உள்ளது. பெண்கள் பள்ளி இடம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில் நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து புல்டோசரில் பள்ளி போர்டை உடைத்தது. இதனை கண்டித்து 11 நாட்களாக மக்கள் போராட்டம் செய்தனர். காங்கிரஸ், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளும் மக்களுக்கு ஆதரவாக இருந்தன. சிறுபான்மை ஆணைய தலைவராக இதுபற்றிய தங்கள் கருத்து என்ன?
பதில்: சம்பந்தப்பட்டவர்கள் இந்த பிரச்சனையை என் கவனத்திற்கு கொண்டு வந்தனர். நான் உடனடியாக நகராட்சி நிர்வாகத் துறை செயலாளரை அழைத்து பேசினேன். இது தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் இருப்பதால் அவசரமாக எதுவும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். அதன் அடிப்படையில் தற்போது பள்ளி திறக்கப்பட்டு உள்ளது என்று எண்ணுகிறேன். உச்ச நீதிமன்ற வழக்கு முடிவு எப்படி வருகிறதோ அதன்படிதான் அரசாங்கம் செயல்பட முடியும். எனவே உச்ச நீதிமன்ற வழக்கிற்காக காத்திருப்பது தான் தற்போது சரியாக இருக்கும் என தெரிகிறது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications