என் பெயரை பயன்படுத்த கூடாது! இனிஷியலை வேணா போட்டுக்கோங்க! அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை
தஞ்சாவூர்: என் பேச்சைக் கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று அன்புமணியை, பாமக நிறுவனர் ராமதாஸ் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். மேலும் இனிஷியலை வேண்டுமானால் போட்டுக் கொள்ளட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தஞ்சை, திருவாரூர் மாவட்ட பாமக, வன்னியர் சங்க பொதுக் குழு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக் கூடாது. அவர் வேண்டுமானால் என் பெயரை இனிசியலாக பயன்படுத்திக் கொள்ளலாம். என் பேச்சைக் கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தவே கூடாது.
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை, தசரன் ஆணையை ஏற்று ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செய்தார். ராமரை 14 ஆண்டுகள் வனவாசம் போக வேண்டும் என தசரதர் சொன்னதும் ராமரின் முகம், அன்றலர்ந்த செங்தாமரை மலர் போல் இருந்தது. "நான் வனவாசமா போக சொல்கிறேன். செயல் தலைவராக இருந்து கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லுங்கள்" என்றுதானே கூறுகிறேன்.
ஐந்து வயது குழந்தை போல் நான் செயல்படுவதாக சிலர் கூறி வருகிறார்கள். 5 குழந்தையான நான்தான் 3 ஆண்டுகளுக்கு முன்பு அன்புமணியை பாமக தலைவராக்கியவன் என ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என இருவரும் மாறி மாறி கூறி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்க இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பொதுக் குழு கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும் அடுத்த சில நிமிடங்களில் நீக்கப்பட்டவர்கள் அதே பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து அதிரடி காட்டுவதாக இருந்து வருகிறது. அதிலும் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.
அது போல் பாமக தலைவர் யார் என்ற விவகாரத்தில் இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளதாகவும் தெரிகிறது. எத்தனையோ முறை கட்சியின் மூத்த நிர்வாகிகள் தந்தை- மகனுக்கு இடையே சமாதான பேச்சு நடத்தி வந்தாலும் அவர்கள் சமரசம் ஆகவில்லை. இதனால் தொண்டர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். இருவரும் அமர்ந்து பேசினால் பிரச்சனை தீரும் என ஜி.கே.மணி அறிவுறுத்துகிறார். இல்லாவிட்டால் பாமகவுக்கு நலிவு ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications