தஞ்சாவூரில் ஓடும் பஸ்ஸில் புரட்டி எடுக்கப்பட்ட தனியார் பஸ் கண்டக்டர்.. வெளியான வீடியோ
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் பஸ்ஸின் கண்டக்டரை இளைஞர்கள் சிலர் சரமாரியாக தாக்கி உள்ளனர். இத் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர், கண்டக்டரை உறவினர்களுடன் சேர்ந்து அடித்து உதைத்திருக்கிறார். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த பயணி ஒருவருக்கும், கண்டக்டருக்கும் இடையே சிறிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பயணி சுந்தரபெருமாள் கோயில் பகுதியில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் பேருந்து சுந்தரபெருமாள் கோயில் பகுதிக்கு வந்ததும் பேருந்தை வழிமறித்து பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கண்டக்டரை சரமாரியாக தாக்கி உள்ளனர். தடுக்க வந்த டிரைவரையும் அந்த இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் சென்றுவிட்டனர்.
இளைஞர்களின் தாக்குதலில் பலத்த காயமடைந்த தனியார் பேருந்து கண்டக்டர் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலின் போது பேருந்தில் இருந்த பயணிகள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.என்ன காரணத்திற்காக பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுரை இளைஞர்கள் தாக்கினார்கள் என்பது அவர்கள் கைதான பிறகே தெரியவரும்.












Click it and Unblock the Notifications