மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகள்.. பட்டுக்கோட்டையையே பதற வைத்த பானு.. காரணம் கேட்டு ஷாக்
தஞ்சாவூர்: சிறையில் உள்ள மகனை ஜாமீனில் எடுக்க முயன்ற மாமியாரை மருமகள் வெட்டிக்கொன்ற சம்பவம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் நடந்துள்ளது. இதையடுத்து மருமகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கழுகப்புளிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவருக்கு 40 வயது ஆகிறது. ஜேம்ஸின் மனைவி பாத்திமா பானு. இவருக்கு 35 வயது ஆகிறது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஜேம்ஸ், பாத்திமா பானு தம்பதி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் கோபம் அடைந்த பாத்திமா பானு பட்டுக்கோட்டை போலீசாரிடம் தனது கணவர் குறித்து புகார் அளித்தார். இதையடுத்து கணவன், மனைவி இருவரையும் அழைத்து விசாரித்த போலீசார் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருந்த காரணத்தால ஜேம்சை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்கள்.
திருச்சி மத்திய சிறையில் உள்ள ஜேம்சை ஜாமீனில் எடுக்க அவருடைய மனைவி பாத்திமா பானு எந்த முயற்சியும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஜேம்ஸ்சின் தாயார் ஆரோக்கியமேரி(58) தனது மகனை ஜாமீனில் எடுக்க தீவிரமாக முயற்சி செய்து வந்திருக்கிறார்கள்.. நான் உள்ளே வைத்தால்,, நீ வெளிய எடுப்பியா, எடுக்க வேண்டாம் என்று கூறி, பாத்திமா பானு மாமியாரிடம் சண்டை போட்டுள்ளாராம். தன்னுடைய கணவரை ஜாமீனில் எடுக்க வேண்டாம் என்றும் அவரை ஜாமீனில் எடுத்தால் அவர் வெளியில் வந்த பிறகு என்னை கொலை செய்துவிடுவார் என்றும் கூறி தடுத்துள்ளார்.
ஆனால் அதை கேட்காத ஆரோக்கியமேரி மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஞாயிறு இரவு மாமியார்-மருமகள் இடையே ஜேம்சை ஜாமீனில் எடுப்பது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பாத்திமா பானு நேரடியாக வீட்டிற்குள் சென்று அங்கிருந்த அரிவாளை எடுத்து வேகமாக வந்திருக்கிறார். பின்னர் தனது மாமியார் ஆரோக்கிய மேரியை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஆரோக்கியமேரி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
மாமியாரை மருமகள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடடினாக ஜேம்சின் வீட்டிற்கு வந்து, ஆரோக்கியமேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து பாத்திமா பானுவை கைது செய்து விசாரித்தனர். அப்போது தான் ஜாமினில் கணவரை எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு கொலையில் முடிந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாமியாரை மருமகள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications