பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்திய நபர்! தஞ்சையில் பரபரப்பு! ஜவாஹிருல்லா முக்கிய கோரிக்கை!
தஞ்சை: தஞ்சாவூரில் பள்ளிவாசலுக்கு காலணியுடன் அத்துமீறி நுழைத்து அச்சுறுத்திய ராணுவ வீரர் தேசிங்கு ராஜாவை ராணுவ பணியிலிருந்து நீக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளிவாசலின் புனிதத் தன்மையை களங்கப்படுத்த முயன்ற தேசிங்கு ராஜாவை தஞ்சை போலீஸார் கைது செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

தஞ்சாவூர் பள்ளிவாசல்
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அல் அன்சர் பள்ளிவாசலில் நேற்று அதிகாலையில் தற்சமயம் இராணுவத்தில் பணி புரியும் தஞ்சாவூர் ரஹ்மான் நகரைச் சேர்ந்த தேசிங்கு ராஜா என்பவர் தொழுகைக்கான அழைப்பு ஒலிவாங்கியில் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்து பள்ளிவாசல் ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

காலணியுடன் பள்ளிவாசலுக்குள்
காலணியுடன் பள்ளிவாசலுக்குள் சென்று அதன் புனிதத்தன்மையை களங்கப்படுத்த முயன்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்தவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தஞ்சை பாதுஷா தலைமையில் ஒரு குழு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். காவல் துறை அதிகாரிகளைச் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அத்துமீறி நுழைந்து
பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துமீறி நுழைதல். வழிப்பாட்டு தலத்தை அசுத்தப்படுத்துதல். பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் உட்பட இந்திய தண்டனை சட்டத்தின் ஏழு பிரிவுகளின் கீழ் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

ராணுவ பணியிலிருந்து
உரிய முறையில் நடவடிக்கை எடுத்து அமைதியை சீர்குலைக்க முயன்ற ராஜாவை கைதுச் செய்து சிறையில் அடைத்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய தேசிங்கு ராஜாவை இராணுவ பணியிலிருந்து நீக்கப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications