அரண்ட அதிராம்பட்டினம் நகராட்சி.. அலைகடலென ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்! கிராமங்களை இணைக்க எதிர்ப்பு
தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் நகராட்சியுடன் தங்கள் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 5 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நகராட்சி அலுவலகத்துக்கு பேரணியாக சென்று முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியுடன் அருகில் உள்ள 3 கிராம ஊராட்சிகளை இணைக்க கடந்த நவம்பர் 6 ஆம் தேதி நகர சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், "நகராட்சிக்கு அருகில் உள்ள 1.) ஏரிப்புறக்கரை, 2.)மழவேனிற்காடு, 3.) நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை இணைக்க கோரி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே, இந்த கிராமங்களை மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் அதிராம்பட்டினம் நகராட்சியுடன் இணைக்க ஏதுவாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், தஞ்சாவூர் அவர்களின் வழியாக மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் அவர்களுக்கு கருத்துரு அனுப்பி வைக்க மன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அதிராம்பட்டினத்தோடு புதிதாக கிராமங்களை இணைப்பதை எதிர்த்து, அதிராம்பட்டினம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பு மற்றும் பல்வேறு இயக்கங்கள் நகராட்சிக்கு நேரில் சென்று ஆணையரிடம் மனு அளித்தனர். நகராட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கடிதம் அளித்தனர். ஆனாலும், நகராட்சியில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக முழு விபரத்தை தெரிவிக்குமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நகர ஆணையரிடம் வலியுறுத்தி இருந்தது. இதை அடுத்து நகராட்சி ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில், "அதிராம்பட்டினம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு பொதுமக்களின் அவசர அத்தியாவசிய தேவைகளான சாலைகள் மேம்பாடு வடிகால் மேம்பாடு பணிகள் யாவும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் நகராட்சியின் வருமானத்தை பெருக்கும் வகையிலும் குடிநீர் திட்டப்பணிகள் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் அடிப்படை உளகட்டமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கும் இந்நகராட்சியில் போதுமான இடம் இல்லாததால் மேற்படி பணிகளுக்கான அரசு நிதிஒதுக்கீடுகளை பெற இயலவில்லை.
எனவே இந்நகராட்சிக்கு அருகில் உள்ள கிராமங்களை அதிராம்பட்டினம் நகராட்சியுடன் இணைக்கக்கோரி பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் கீழ்கண்ட கிராமப்பகுதிகளை இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 1) ஏரிப்புரக்கரை கிராம பகுதியில் இருந்து ஒரு பகுதியான ஆதிதிராவிடர் தெரு தொட்டியம்பள்ளி, பிலால் நகர், எம் எஸ்.எம். நகர். கே. எஸ்.ஏ. நகர், மேலத்தெரு மேற்கு பகுதி ஆகிய பகுதிகளின் உத்தேச மக்கள் தொகை 993யும்.
2) மழவேனிற்காடு கிராமப்பகுதியில் இருந்து ஒரு பகுதி நடுவிக்காடு, மிலாரிக்காடு பாத்திமா நகர், சதாம் நகர் ஆகிய பகுதிகளின் உத்தேச மக்கள் தொகை 1113யும், மற்றும் 3) நரசிங்கபுரம் கிராமப்பகுதியில் ஒரு பகுதியான முடுக்குக்காடு, வள்ளிக்கொல்லைக்காடு ஆகிய பகுதிகளின் உத்தேச மக்கள் தொகை 796யும் இவற்றின் மொத்த உத்தேச மக்கள் தொகை 2902 ஆகும். எனவே, மேற்கண்ட பகுதிகளை மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் அதிராம்பட்டினம் நகராட்சியுடன் இணைப்பதற்கு பார்வை-2ல் காணும் மன்ற தீர்மானம் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற விபரம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியுடன் கிராமங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஈசிஆர் சாலையில் நகராட்சி அலுவலகம் முன் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம். pic.twitter.com/hKcVcdH0Ab
— Noorul ibn Jahaber Ali (@nooruljourno) November 22, 2023
இந்த நிலையில் அதிராம்பட்டினம் நகராட்சியுடன் தங்கள் கிராம பகுதிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மழவேனிற்காடு, நரசிங்கபுரம், ஏரிப்புறக்கரை, மகிழங்கோடை, தொக்காலிக்காடு ஊராட்சியை சேர்ந்தவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்கள், பெண்கள், முதியவர்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் பேரணியாக வந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். நகராட்சி நிர்வாகம் சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தெரிவிக்கையில், "நகராட்சியுடன் இணைவதால் கிராம மக்களின் 100 நாள் வேலை பறிக்கப்படும், வரிகள் 10 மடங்கு அதிகரிக்கும், தொழில் மானியங்கள் கிடைக்காது, கால்நடைகளை வளர்க்க முடியாது, விவசாய மானியம் கிடைக்காது, குடிநீர் கட்டணம் 5 மடங்கு உயரும், இலவச மின்சாரம் கிடைக்காது, வீட்டு மனை அங்கீகார கட்டணம் அதிகரிக்கும், ஊராட்சிகளுக்கான மத்திய - மாநில நிதிகள் நிறுத்தப்படும், NRCC நிதியும் கிடைக்காது என்றும், வாழ்வாதாரமே பறிபோகும் அபாயம் உள்ளது." என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications