“முதல்வர் ஸ்டாலின் மடியில் விழுந்துவிட்டேன்”.. மனமுருகிப் பேசிய வைத்திலிங்கம்!
தஞ்சாவூர்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் 10,000 பேர் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் மனமுருகிப் பேசிய வைத்திலிங்கம், "முதல்வர் ஸ்டாலினுக்கு துணையாக இந்த திராவிடத்தை காக்க பாடுபட வேண்டும் என சிபிச் சக்கரவர்த்தி மடியில் விழுந்த புறா போல், நான் முதல்வர் மடியில் விழுந்திருக்கிறேன்." எனக் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் மாற்றுக் கட்சியில் இருந்து 10,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடந்தது. சமீபத்தில் திமுகவில் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் நடந்த மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

ஒரத்தநாடு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம் அதிமுகவில் டெல்டா மண்டல தளபதியாக விளங்கினார். பின்னர் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் இன்று டெல்டா மண்டல மகளிரணி மாநாட்டில் தனது ஆதரவாளர்கள் 10,000-க்கும் மேற்பட்டோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்துள்ளார்.
திமுக மகளிர் மாநாட்டு பந்தல் அருகே இதற்காக தனியாக அமைக்கப்பட்ட மேடைப்பந்தலில் நடைபெற்ற விழாவில் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்தார். அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.
இந்த விழாவில் வைத்திலிங்கம் பேசுகையில், "நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவுக்கே வழிகாட்டியாக, முன்மாதிரியாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து 1 கோடியே 30 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதால், பெண்கள் முதல்வரை மனமார வாழ்த்துகிறார்கள். புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணத் திட்டம் என பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இன்றைக்கு திராவிடத்தை கண்டாலே சிலர் மனவேதனை அடைகின்றனர். யாரும் இந்த திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது என்பதற்கு சாட்சியாக நமது முதல்வர் எதற்கும் துணிந்து, என்னுடைய உயிர் திராவிடம் தான் என வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்போது நாம் அவருக்கு துணையாக இந்த திராவிடத்தை காக்க பாடுபட வேண்டும் என சிபிசக்கரவர்த்தி மடியில் விழுந்த புறா போல், நான் முதல்வர் மடியில் விழுந்திருக்கிறேன்." எனப் பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "வைத்திலிங்கம் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கக்கூடிய காட்சியை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய முகத்தில் ஒரு சோர்வு இருந்துகொண்டே இருக்கும். எதையோ பறிகொடுத்தது போல் சட்டமன்றத்தில் அமர்ந்திருப்பார். வேண்டா வெறுப்போடு சில கேள்விகளைக் கேட்பார். இந்தக் காட்சியை நான் பழைய நேரங்களில் சட்டமன்றத்தில் பார்த்தது உண்டு. ஆனால் அது என்ன என்பதை இப்போதுதான் உணர்ந்துகொண்டேன். 'நாம் சுயமரியாதையோடு நாம் பணியாற்ற முடியவில்லையே' என்ற ஏக்கம்தான் அவருக்கு இருந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications