பாபநாசத்தில் பரபரப்பு.. சிறுமியுடன் ஓட்டம் பிடித்த இளைஞர்.. மோதலில் ஒருவர் பலி.. 11 பேர் கைது
தஞ்சாவூர்: சூர்யா என்ற இளைஞர் 17 வயது சிறுமியுடன் ஊரை விட்டு ஓடிவிட்டார்.. இந்த காதல் விவகாரத்தில் ஏற்பட்ட இருவீட்டு மோதலில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார். இதற்கு காரணமான 11 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தாலும், பாபநாசம் அருகே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பெருமாக்கநல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா. 22 வயதான இவர், சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.
இவர், அதே ஊரை சேர்ந்த டிரைவர் கருணாகரனின் உறவினரான 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். காதலர்கள் இருவருமே வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். வீட்டில் எதிர்ப்பு அதிகமாக கிளம்பியதால், சூர்யாவும், அந்த சிறுமியும் கடந்த 18-ம் தேதி திடீரென வீட்டை விட்டு போய்விட்டனர்.

சிறுமி
சிறுமி தலைமறைவானதால், அவளது உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு பெருமாக்கநல்லூருக்கு வந்து சூர்யாவின் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கினார்கள். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவையும் அடித்து நொறுக்கியதுடன், வீட்டு கூரையையும் பிய்த்து எறிந்தனர்.

கருணாகரன்
இதனால் ஆத்திரமடைந்த சூர்யாவின் உறவினர்கள், சிறுமியின் குடும்பத்தினரை பலமாக தாக்கி, வீட்டையும் சூறையாடினர். இந்த தாக்குதலில் கருணாகரனை கட்டையால் அடித்து தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார்.

ரத்த வெள்ளம்
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றும், வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து, அய்யம்பேட்டை போலீசில் புகார் செய்ததையடுத்து, 17 வயது சிறுவன் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதற்றம்
காதல் விவகாரத்தில் டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல், மற்றும் பதற்றம் காரணமாகவும், அசம்பாவிதம் ஏதும் நடக்காத வகையிலும், இந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் வீட்டை விட்டு ஓடிப்போன காதல் ஜோடி எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.












Click it and Unblock the Notifications