தேனி ரோட்டில் நம்பர் பிளேட் இல்லாத வண்டி! திறந்து பார்த்தால் ஆடிப்போன ஆண்டிப்பட்டி.. என்ன தோசை மாவு?
தேனி: தேனி அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் வந்ததால், போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.. அப்போதுதான் வாகனத்தில் இருந்த மூட்டைகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் ரேஷனில் இலவசமாக வழங்கப்படும் அரிசிக்கு கேரளாவில் நல்ல விலை கிடைப்பதால், தேனி மாவட்டத்திலிருந்து டன் கணக்கில் ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

ரேஷன் அரிசி கடத்தல்கள்
அதேபோல,ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக வாங்கி அவைகளை, இட்லி மாவு அரைக்கும் ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கெனவே பிரத்யேகமான புரோக்கர்களும், அரிசி மூட்டைகளை பதுக்கி வைப்பதற்காக, பிரத்யேகமான குடோன்களும் உள்ளதாம்.
அதனால்தான், தேனி, ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறாத வகையில், போலீசார் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்படியிருந்தும், சில நாட்களுக்குமுன்பு ரேஷன் அரிசி கடத்தல் நடந்தது.. தேனி மாவட்டம் கம்பம்மெட்டு மலைச்சாலை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. இதையடுத்து கம்பம்மெட்டு மலைச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
1150 கிலோ பறிமுதல்
அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி போலீசார் சோதனையிட்டபோது, 1150 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.. இதையடுத்து, அந்த அரிசியையும், கடத்தலில் ஈடுபட்ட சுரேஷ், முரளி, மகேஸ்வரனையும் போலீசார் கைது செய்திருந்தனர்..
இந்நிலையில் நேற்றையதினம், ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுத்துறை எஸ்ஐ முரளிதரன் தலைமையிலான போலீசார் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள கன்னியப்பபிள்ளைப்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
மூட்டை மூட்டையாய்
அப்போது அந்த வழியாக, நம்பர் பிளேட் இல்லாமல் வந்த ஒரு ஆம்னி காரை மறித்து சோதனை செய்தார்கள்.. அப்போது அந்தக் காரில் 6 மூட்டைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது..
இதையடுத்து, ரேஷன் அரிசியை விற்பனைக்காக கடத்தி வந்த தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த சக்திகுமார் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை உத்தமபாளையம் வாணிபக்கழக கிட்டங்கியிலும் ஒப்படைத்தனர். அத்துடன், ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி காரையும் பறிமுதல் செய்தனர்.
காவல்துறை தொடர்ந்து முன்னெடுத்து வரும் இந்த நடவடிக்கைகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.. முன்னதாக, ரேசன் அரசி பொருட்கள் கடத்தல் தொடர்பாக 18005995950 என்ற எண்ணிலும், 9677736557 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தமிழக காவல்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications