பழசை பேசாதீங்க! அதிமுக கூட்டத்தில் தொண்டர்கள் கோரஸ்! 2 முறை கோபித்துக் கொண்ட திண்டுக்கல் சீனிவாசன்!
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பேச விடாமல் தொண்டர்கள் கோரஸ் எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக பொதுக்குழு பற்றி திண்டுக்கல் சீனிவாசன் வாய் திறந்த போதெல்லாம் ''ஏங்க பழசை பேசாதீங்க'' என மேடைக்கு கீழ் இருந்த அதிமுக தொண்டர்கள் குரல் எழுப்பினர்.
தன்னை பேச விடாமல் செய்ததால் 2 முறை கோபித்துக் கொண்டு தனது இருக்கையில் அமர்ந்துகொண்ட திண்டுக்கல் சீனிவாசனை பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிர்வாகி சமாதானம் செய்து மூன்றாவது முறையாக பேச வைத்தார்.

அதிமுக பொதுக்கூட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக பொதுக்குழு பற்றி ஆரம்பித்தார். இதற்கு மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த அதிமுக தொண்டர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். ஆனாலும் அதனை பொருட்படுத்தாத திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொதுக்குழு விவகாரத்தை மீண்டும் பேச ஆரம்பித்தார்.

பழசை பேசாதீங்க
அப்போது ஏங்க பழசை பேசாதீங்கன்னு சொல்றோம், திருப்பி திருப்பி அதையே பேசினால் எப்படி என ஒருவர் ஆக்ரோஷம் காட்டினார். இதனால் தனது பேச்சை பாதியில் முடித்துக் கொண்டு மேடையில் அமர்ந்தார். பிறகு சமாதானம் செய்யப்பட்டு மீண்டும் பேச வந்தார். அப்போது நீட் தேர்வு பற்றி பேசியதோடு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்பது மத்திய அரசு தெளிவாக கூறிவிட்டது எனப் பேசிக்கொண்டு இருந்தார்.

நீட்டெல்லாம் இருக்கட்டும்
அப்போது கூட்டத்தின் நடுவில் இருந்து எழுந்த ஒருவர், பெருத்த குரலில் நீட் தேர்வெல்லாம் இருக்கட்டும், முதலில் தேனி மாவட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலாளரை போடுங்க என ஆவேசம் காட்டினார். ''அட யாருய்யா நீங்க, சும்மா கசகசன்னு பேசிக்கிட்டே இருக்கீங்க'' என ஒபன் மைக்கில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டு மீண்டும் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்துகொண்டார் திண்டுக்கல் சீனிவாசன். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

2 முறை கோபித்துக் கொண்டார்
இவ்வாறு 2 முறை கோபித்துக் கொண்டு தனது பேச்சை பாதியிலேயே முடித்துக் கொண்ட திண்டுக்கல் சீனிவாசனை, பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிர்வாகி சமாதானம் செய்து மூன்றாவது முறையாக பேச வைத்தார். மொத்தத்தில் திண்டுக்கல் சீனிவாசனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அவரிடமே நேருக்கு நேர் எகிறிய நிகழ்வு ஆண்டிப்பட்டியில் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications