தேனியில் அடமானம் வைத்த பூர்வீக வீடு.. ஏறிய கடன் வட்டி.. குங்குமத்தை குழைத்து சுவற்றில் எழுதிய பெண்
தேனி: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வீட்டுக் கடன் தொடர்பான நிதி நிறுவனத்தின் கடும் நெருக்கடியால், ஒரு பெண் தனது பேத்தியுடன் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... ஏற்கனவே தமிழகத்தில் கடன் வாங்கி மனரீதியான உளைச்சலில் பலரும் உள்ள நிலையில், இந்த தேனி சம்பவம் பெரும் அதிர்வலையை தேனியில் ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடந்தது தேனியில்?
ஆண்டிப்பட்டி அருகே வரதராஜபுரம் கிராமம், ஒத்தவீடு பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித்.. 37 வயதான இவர் ஒரு கூலித் தொழிலாளி ஆவார்.. இவரது மனைவி பெயர் சத்யா.. தருணிக்கா, லித்திகாஶ்ரீ என்ற 2 மகள்களும், கேசவ பாண்டிஎன்ற மகனும் உள்ளனர். ரஞ்சித்துடன் அவரது அம்மா பஞ்சம்மாளும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 2024 ம் ஆண்டு மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், தனது பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து ரூ.25 லட்சம் கடன் வாங்கியுள்ளார் ரஞ்சித். ஆரம்பத்தில் கடன் தவணைகளை முறையாக செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
பூர்வீக வீடு அடமானம் - தவணை தொகை
ஆனால் கடந்த சில மாதங்களாக குடும்ப சூழ்நிலை காரணமாக தவணைத் தொகையை செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இதையடுத்து நிதி நிறுவன பணியாளர்கள் தொடர்ந்து பணம் செலுத்துமாறு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த நெருக்கடி மிரட்டலாக மாறியுள்ளது..
அதாவது தவணை தொகையை செலுத்தவில்லை என்றால் வீட்டை ஜப்தி செய்வோம் என நேரிலும், செல்போன் மூலமாகவும் மிரட்டினார்களாம்.. மேலும், அதே ஊரில் பஞ்சம்மாளுக்கு சொந்தமான பூர்வீக வீட்டில் நிதி நிறுவனம் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதுடன், அந்த சொத்து நிதி நிறுவனத்துக்கு சொந்தமானது என பெயிண்டால் எழுதப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவங்களால் மனமுடைந்த பஞ்சம்மாள், கடந்த மாதம் 31ம் தேதி ரஞ்சித் மற்றும் அவரது மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில், விஷம் குடித்துள்ளார். தன்னுடன் இருந்த பேத்தி தருணிக்காவுக்கும் விஷம் கொடுத்ததாக கூறப்படுகிறது..
குங்குமத்தை கரைத்து சுவற்றில் எழுதி
ஆனால் நடந்த சம்பவம் குறித்து வெளி உலகத்துக்கு தெரியப்படுத்த நினைத்தார்.. கடிதம் எழுதி வைக்கலாம் என்றால் பஞ்சாம்மாளுக்கு எழுத படிக்க தெரியாது.. அதனால் தனது பேத்தியின் உதவியுடன் குங்குமத்தை தண்ணீரில் கரைத்து, தனது முடிவுக்கு காரணமானவர்கள் குறித்து வீட்டு சுவரில் எழுதி வைத்து, இறந்து விட்டார்..
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ரஞ்சித், அம்மாவும் மகளும் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பஞ்சம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமி தருணிக்கா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரஞ்சித் அளித்த புகாரின் பேரில், நிதி நிறுவன ஊழியர்கள் மாயாண்டி, கண்ணன், கார்த்திக் சேது உள்ளிட்ட 4 பேர் மீது ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டத்தின் மூலம் தீர்வு
இப்போதெல்லாம் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் தவணை தாமதமானால் மிரட்டல் விடுப்பது இன்று வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது... இதனை பொறுமையுடன் சகிப்பது தீர்வு கிடையாது, ஆனால் சட்டரீதியாக எதிர்கொள்ள முடியும்.
கடன் வசூல் என்ற பெயரில் மிரட்டல், அவமானம், வீட்டிற்கு வந்து பயமுறுத்தல் அனைத்துமே சட்டவிரோதமானதாகும்.. வீட்டை ஜப்தி செய்வோம் என மிரட்டுதல், உறவினர்கள், அண்டை வீட்டாரிடம் பேசுதல், சொத்து மீது எழுதுதல் போன்றவையும் கூட துன்புறுத்தல் தான்.. இத்தகைய நெருக்கடிகளை சட்டத்தின் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்...!!!












Click it and Unblock the Notifications