ஆதார் இணைக்காததால் ரேஷன் கார்டுகளில் இருந்து குழந்தைகள் பெயர் அதிரடியாக நீக்கம்.. மேஜர் உத்தரவு
தேனி: தேனி மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரத்து 655 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் மொத்தம் 12 லட்சத்து 28 ஆயிரத்து 271 பேர் குடும்ப உறுப்பினர்களாக உள்ளனர். இதில் ஆதார் எண் இணைக்காததால் ரேஷன் கார்டுகளில் இருந்து குழந்தைகள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுத்த பின்னரே, சேர்க்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆதார் எண் இல்லாவிட்டால், இந்தியாவில் வாழ முடியாது என்கிற நிலை உருவாகிவிட்டது. வங்கி கணக்கு தொடங்கி, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை வாங்க, பள்ளியில் குழந்தைகளை சேர்க்க, சாதி சான்றிதழ் வாங்க, கல்வி உதவி தொகை வாங்குவதற்கு, அரசின் மானியங்களை பெறுவதற்கு, ரேஷனில் அரிசி வாங்குவதற்கு, மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு, இந்தியாவின் அனைத்து சேவைகளுமே ஆதாரை மையப்படுத்தி உருவாகி உள்ளன.

ஆதார் கார்டு தான் ஒருவரின் அடையாளம் என்பது போல் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் அரசு யாருக்கு எவ்வளவு மானியம் தருகிறோம் என்பதை எளிதாக அறிய முடியும் என்றாலும், இதனால் சாமானியர்கள் சிக்கலை சந்திக்காமல் இல்லை. ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க, ரேஷன் கார்டை முகவரி மாற்ற, மிகப்பெரிய அளவில் போராட வேண்டியுள்ளது.
ரேஷனில் பெயர் சேர்க்க வேண்டும் என்றால், ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் எண் வேண்டும். அப்படி ஆதார் எண் இல்லாவிட்டால் பெயரை சேர்க்க முடியாது. இந்நிலையில் ஆதார் எண் இணைக்காததால் ரேஷன் கார்டுகளில் இருந்து குழந்தைகள் பெயர் நீக்கப்பட்டிருப்பது தேனி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டத்தில் 517 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. இந்த ரேஷன் கடைகள் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 30 ஆயிரத்து 655 ரேஷன் கார்டுகளுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 28 ஆயிரத்து 271 பேர் குடும்ப உறுப்பினர்களாக உள்ளனர். ரேஷன் கார்டுகளில் பெயர் இடம் பெற்றிருக்கும் நபர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு அறிவித்திருந்தது. அதன்படி ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் சேர்க்கும் போது ஆதார் எண் கட்டாயம் என்ற நிலை கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்றும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் எண் இல்லாவிட்டால் பிறப்பு சான்றிதழை வைத்து பெயர் சேர்க்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, பிறப்பு சான்றிதழை வைத்து பெற்றோர்கள் பலரும் தங்களின் குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்த்து இருந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் ஆதார் எண் இணைக்காத நபர்களின் பெயர்கள் ரேஷன் கார்டில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயர்களும் நீக்கப்பட்டு வருகின்றன.
பெற்றோர்கள் எந்த விண்ணப்பமும் கொடுக்காத நிலையில், தேனி மாவட்டத்தில் பெற்றோர்கள் பலரின் செல்போன் எண்ணுக்கு நேற்று ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில், குடும்ப உறுப்பினர் நீக்கம் தொடர்பான கோரிக்கை பெறப்பட்டதாக வந்துள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் மற்றொரு குறுஞ்செய்தி வந்தது. அதில், 'குடும்ப உறுப்பினர் நீக்கம் ஒப்புதல் அளிக்கப்பட்டது' என்று வந்துள்ளது. இதனால் குழப்பம் அடைந்த பெற்றோர் தங்களின் ரேஷன் கார்டு விவரங்களை இணையதளம் மற்றும் பொதுவினியோக திட்ட செல்போன் செயலி மூலம் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டார்கள். அப்போது, ஆதார் எண் இணைக்காத தங்களின் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டு இருந்துள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறும் போது, ஆதார் எண்ணுடன் மீண்டும் இ-சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளோம். தேனி மாவட்டத்தில் 12 லட்சத்து 19 ஆயிரத்து 881 பேர் தங்களின் ஆதார் விவரங்களை இணைத்திருக்கிறார்கள். இன்னும், 8,390 பேரின் ஆதார் எண் இணைக்கப்படாமல் உள்ளது. இதை இணைக்க வைக்க வேண்டும் என்பதற்காக ஆதார் எண் இணைக்காத நபர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நீக்கம் செய்யப்பட்டவர்கள் தங்களின் ஆதார் எண் விவரங்களுடன் இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications