மதுரை-போடி இடையே 121 கிமீ வேகத்தில் இயக்கப்பட்ட ரயில்.. ஆண்டிபட்டியில் ஆடுகளுடன் பாய்ந்த மீனாட்சி
தேனி: மதுரை-போடி இடையே சோதனை ஓட்டமாக, 121 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்ட நிலையில், அதில் ஆடு மேய்த்தபடி கடந்து சென்ற மூதாட்டி பலியானார். மேலும் 6 ஆடுகளும் இறந்து போயின.
100 வருடங்களாக இயங்கி வரும் மதுரை போடிநாயக்கனூர் ரயில் பாதையில் சுமார் 13 வருடங்கள் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. அகல ரயில் பாதை பணிகள் முடிந்த நிலையில், மதுரை-போடிநாயக்கனூர் இடையே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரயில் சேவை தொடங்கியது. தற்போது மதுரை போடிநாயக்கனூர் இடையே தினமும் பணிகள் ரயில் சேவையும், போடிநாயக்கனூர் -சென்னை சென்ட்ரல் இடையே வாரத்தில் 3 நாட்கள் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர சரக்கு ரயில்களும் வந்து செல்கின்றன.

தேனி மாவட்டத்திற்கு வரும் இந்த ரயில் பாதையில் சுமார் 100 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பாதையில் ரயில் பாதை முழுமையாக மின்மயமாக்கல் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. மின்மயமாக்கல் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இங்கு ரயில் இயக்கும் வேகத்தை 120 கிமீயாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், மதுரை-போடிநாயக்கனூர் இடையே சிறப்பு ரயில் இயக்கி தண்டவாள உறுதித்தன்மை குறித்து நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த ரயில் சுமார் 121 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது. இதற்காக நேற்று பிற்பகலில் மதுரையில் இருந்து ஆய்வு ரயில் புறப்பட்டு உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக போடி ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
பின்னர் போடியில் இருந்து மாலையில் புறப்பட்டு மதுரைக்கு விரைந்து சென்று கொண்டிருந்தது. இந்த ஆய்வு ரயிலில் ரயில்வே அதிகாரிகளும் பயணம் செய்து ஆய்வு செய்து கொண்டிருந்தனர். முன்னதாக ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், ஆய்வு ரயில் வரும் போது தண்டவாளத்தை யாரும் கடந்து செல்லாமல் தடுக்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதேநேரம் சிறப்பு ரயில் ஆய்வையொட்டி மதுரை-போடிநாயக்கனூர் இடையேயான தண்டவாளத்தை கவனத்துடன் கடந்து செல்ல வேண்டும் என்று முன்னதாகவே ரயில்வே நிர்வாகம் சார்பில் எச்சரிக்கையும் முறைப்படி விடுக்கப்பட்டது. ஆனால் இந்த எச்சரிக்கை பற்றி தெரியாத சிலர் ஆபத்தான முறையில் ரயில்களை கடந்து சென்றார்கள்.
அப்படித்தான் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருடைய மனைவி மீனாட்சி (வயது 60) தனது ஆடுகளை நேற்று வழக்கம் போல அப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் மாலையில் அவர், வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது ஆண்டிப்பட்டி-தேனி இடையே ரயில் தண்டவாளத்தை ஆடுகளுடன் கடக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில், வேகமாக வந்த ஆய்வு ரயில் மீனாட்சி மீது பயங்கரமாக மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதேபோல் தண்டவாளத்தில் நின்றிருந்த 6 ஆடுகளும் ரயிலில் அடிபட்டு இறந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மீனாட்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்கள் வழக்கமாக காலையில் ஒருமுறை மாலையில் ஒருமுறை மட்டுமே வரும் என தவறாக புரிந்து கொண்டு ரயில் தண்டவாளத்தை கடந்த மூதாட்டி ஆடுகளுடன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications