தேனி கம்பம் மெட்டு சாலையில் காரில் மூவர் சடலம்! விசாரணையில் கிடைத்த பகீர் தகவல்
தேனி: தேனி கம்பம் மெட்டு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து இன்று காலை 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் யார் என்ற விவரங்களை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் மூவரும் எப்படி இறந்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு தேசிய நெடுஞ்சாலை கேரளாவுக்கு செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் சேனையோடை பகுதியில் ஒரு காட்டு பகுதியில் புளியமரத்தடியில் கேரள மாநில பதிவெண் கொண்டிருந்த கருப்பு கார் ஒன்று நீண்ட நேரமாக நின்றுக் கொண்டிருந்தது.

அந்த காரில் ஒரு பெண்ணும் 2 ஆண்களும் நீண்ட நேரமாக தூங்கிக் கொண்டிருந்தனர். இதை அந்த வழியாக காட்டு பகுதிக்கு வேலைக்கு செல்வோர் பார்த்துள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வரும் போதும் காட்டு பகுதியில் காரில் அவர்கள் 3 பேரும் உறங்கியபடியே இருந்தனர்.
இதனால் அவர்கள் காரின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் அவர்கள் மூவரும் எந்த அசைவும் இல்லாமல் இருந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் உடலில் எந்தவித அசைவும் இல்லாததாலும் கார் கதவை உள்பக்கமாக பூட்டியபடி இருந்ததாலும் அவர்கள் கம்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த கம்பம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காரின் உள்ளே இருந்தவர்களை எழுப்ப முடியாமல் கார் கதவை உடைத்தனர். அப்போது போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நீண்ட நேரமாக காரின் உள்ளே இருந்த அவர்கள் மூவரும் இறந்த நிலையில் இருந்தனர்.
3 உடல்களையும் மீட்ட கம்பம் போலீஸார், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸாரின் தகவலை அடுத்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த வாட்டர் பாட்டில் உள்ளிட்டவற்றை சேகரித்தனர்.
கேரள பதிவெண் கொண்ட வாகனத்தில் ஒரு பெண்ணும் இரு ஆண்களும் இறந்து கிடந்த நிலையில் அவர்கள் யார் என போலீஸார் விசாரணை நடத்தினர். காரில் இருந்த அவர்களுடைய அடையாள அட்டை மூலம் அவர்கள் யார் என்பதை கண்டறிந்தனர். காரில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் கோட்டயத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரியான ஜார்ஜ், அவரது மனைவி மெர்சி, அவர்களுடைய மகன் அங்கு ஜார்ஜ் என தெரியவந்தது.
இதையடுத்து கேரள போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது கொலையா இல்லை தற்கொலையா என போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் மூவரும் கடந்த 4 தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிக் கொண்டு காரில் வெளியே சென்றது தெரியவந்துள்ளது. இதனால் 4 நாட்களாகியும் அவர்கள் மூவரையும் காணவில்லை என்றும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர்களுடைய உறவினர்கள் கேரள கோட்டய போலீஸில் புகார் அளித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து ஜானின் உறவினர்களிடம் விசாரித்த போது ஜான் , நீண்ட காலமாக கடன் பிரச்சினையால் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவித்தனர். கடன் தொல்லையால் மூவரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மூவரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியானால்தான் அவர்களின் மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications