"கடனை கட்டவில்லை.." வீட்டு சுவர் முழுவதும் எழுதி வைத்த தனியார் நிதி நிறுவனம்.. தேனி அருகே பரபரப்பு
தேனி: தேனி அருகே கடனை செலுத்திய பிறகும் ரூ.1.5 லட்சம் செலுத்த வேண்டும் எனக்கூறிய தனியார் நிதி நிறுவனம், தொகையை கொடுக்காததால் வீட்டு சுவற்றில் கடனை கட்டவில்லை என அடாவடி செயலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பகுதி அன்னை இந்திரா நகர் காலனி. இப்பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். தேனியில் உள்ள தனது வீட்டை அடமானமாக வைத்து கடனை வாங்கியதாக சொல்லப்படுகிறது. சமையல்காரராக பணியாற்றி வரும் பிரபு தனக்கு கிடைக்கும் கம்மியான வருமானத்தில் கடும் பாடுபட்டு தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை கட்டியிருக்கிறார்.

பிறகு வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கியிருந்ததால் ஆவணங்களை தருமாறு தனியார் நிதி நிறுவன அதிகாரிகளிடம் கேட்டு இருக்கிறார். ஆனால், தனியார் நிதி நிறுவன அதிகாரிகளோ மறுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் 1.50 லட்சம் கடன் பாக்கி இருப்பதாகவும் அவற்றை கட்டி விட்டால் ஆவணங்களை தருவதாகவும் நிதி நிறுவனம் தரப்பில் சொன்னதாக தெரிகிறது.
இந்த நிலையில் தான், பிரபு வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அவர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டுக்கு வந்த நிதி நிறுவன ஊழியர்கள், வீட்டு சுவர் முழுவதும் வங்கி கடன் கட்டவில்லை என்று பெரிய எழுத்துக்களில் பெயிண்டால் எழுதி விட்டு சென்றுள்ளனர். அது மட்டும் இன்றி பிரபுவின் குடும்பத்தினரையும் தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் மிரட்டி விட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.
வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பிரபு, வீட்டில் எழுதப்பட்டு இருந்த வாசகங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது தொடர்பாக தனியார் நிதி நிறுவன ஊழியர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர். வாங்கிய கடனை அடைத்த பிறகு தனியார் நிதி நிறுவனம் தொடர்ந்து பணம் கேட்டு வந்ததோடு வீட்டிற்கே வந்து வீட்டு சுவற்றில் கடன் கட்டவில்லை என அவமானப்படுத்தும் நோக்கில் எழுதி வைத்து விட்டு நிதி நிறுவன ஊழியர்கள் சென்றது அப்பகுதியிலும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனியார் நிதி நிறுவனத்தின் மீது அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் பிரபு புகார் அளித்து உள்ளார். மேலும் தனியார் நிதி நிறுவனத்திடம் உள்ள தனது ஆவணங்களை மீட்டு தர வேண்டும் என்றும் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரபு கூறுகையில், நான் வாங்கிய கடனுக்கு மாத தவணையை ஒருமுறை தாமதமாக கட்டிய போது எனது பைக்கை நிதி நிறுவன ஊழியர்கள் எடுத்து சென்றனர்.
திருப்பிக் கேட்ட போதும் தரவில்லை. பின்னர் இது தொடர்பாக நான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தேன். அதன்பிறகே எனது பைக்கை மீட்க முடிந்தது. எனவே இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் தற்போது இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
கடனை அடைக்கவில்லை எனக் கூறி வீட்டு சுவர் முழுவதும் கடன் அடைக்கவில்லை என தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் எழுதி வைத்து விட்டு சென்றது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நிதி நிறுவனத்தின் செயலை பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டித்து வருகின்றனர். மேலும் போலீசார் சட்டப்படி இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications