தேனி சாக்கலூத்து மெட்டில் தங்கம் தந்த சர்ப்ரைஸ்.. கேரளாவிற்கு 4வது பாதை.. 44 வருட கனவு நிறைவேறுது?
தேனி : தேனி மாவட்டத்தின் அண்டை மாவட்டமான இடுக்கி கேரளாவில் இருக்கிறது. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு செல்ல போடிமெட்டு, குமுளி, கம்பம்மெட்டு ஆகிய 3 மலைப்பாதைகள் இருக்கின்றன. கேரளாவிற்கு தேவாரம் அருகே சாக்கலூத்து மெட்டு வழியாக ஒரு காட்டுப்பாதை உள்ளது. 44 வருடங்களாக கனவாகே உள்ள இந்த பாதையை நிறைவேற்ற தேனி எம்பி தங்கதமிழ்செல்வன் எடுத்த முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பாதை நிறைவேறினால் தேனி மாவட்ட மக்களுக்கு எவ்வளவு நன்மை என்பதை பார்ப்போம்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை பொறுத்தவரை தேனி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ளது. இது கேரளா என்றாலும் ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள். இங்கு பல்வேறு பகுதிகளில் பெரும்பான்மை மக்கள் தமிழர்கள் தான். தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி மாவட்டத்திற்குள் செல்ல 3 பாதைகள் உள்ளன. போடி மெட்டு, குமுளி, கம்பம் மெட்டு ஆகிய 3 பாதைகள் உள்ளன. இந்த மூன்று பாதைகளிலும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவிற்கு செல்கின்றன. தமிழகத்திற்கும் கேரளாவில் இருந்து ஏராளமான வாகனங்கள் வருகின்றன.

தேயிலை தொழிலாளர்கள்
இடுக்கி மாவட்டத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களின் ஏலக்காய், தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதனால் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், தொழிலாளர்கள் தேயிலை, ஏலக்காய் தோட்ட வேலைகளுக்கு தினமும் ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகிறார்கள். தினமும் காலையிலும் மாலையிலும் 100க்கணக்கான ஜீப்கள் மூன்று பாதைகளிலும் சென்று வருவதை சர்வ சாதாரணமாக காண முடியும்.
60 கிமீ சுற்ற வேண்டும்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பணை மற்றும் நெடுங்கண்டம் ஆகிய நகரங்கள் முக்கியமான நகரங்கள் ஆகும். இதில் நெடுங்கண்டம் நகரம் இடுக்கியில் இருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ளது. இந்த நகரத்திற்கு தேனி வழியாக தேவாரம் கடந்து செல்ல வேண்டுமென்றால் கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு வழியாக சுமார் 65 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். இதேபோல் போடிமெட்டு வழியாக 60 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும்.
நெடுங்கண்டம் பக்கம்
ஆனால் தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து தமிழக-கேரள எல்லையான சாக்குலூத்துமெட்டு என்ற பகுதி வழியாக வெறும் 20 கிலோ மீட்டர் தூரத்தில் நெடுங்கண்டத்துக்கு விரைந்து சென்றுவிட முடியும். எனவே சாக்குலூத்து மெட்டு வழியாக கேரளாவுக்கு 4-வது மலைப்பாதை அமைக்க வேண்டும் என்பது தேனி மாவட்ட மக்கள் கடந்த 44 வருடங்களாக போராடி வருகிறார்கள்.
வனத்துறை மறுப்பு
முதல்முறையாக எம்ஜிஆர் ஆட்சியில் அதாவது, 1981-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் சாக்குலூத்து மெட்டு வழியாக, நெடுங்கண்டம் செல்லும் வகையில் மலைப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகளும் நடந்தது. அதன்படி தேவாரம் மீனாட்சிபுரத்தில் இருந்து சாக்கலூத்து மெட்டு அடிவாரம் வரை 6 கிலோமீட்டர் தூரத்துக்கு தார்சாலை அமைத்தார்கள். அதன்பிறகு அடர்ந்த வனப்பகுதி என்று கூறி, 4.5 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க வனத்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனால் சாக்கலூத்து மெட்டு மலைப்பாதை திட்டம் முற்றிலும் முடங்கிவிட்டது.
44 வருட கனவு
கடந்த 44 ஆண்டுகளாக சாக்கலூத்து மெட்டு பாதை திட்டம் கிடப்பில் உள்ளது. வனத்துறையினரிடம் அனுமதி பெற எந்த பெரிய முயற்சியும் இதுவரை அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்படவில்லை..பாதியிலேயே நிறுத்தப்பட்ட சாக்கலூத்து மலைப்பாதையை நிறைவேற்றினால், தேவாரம், தே.மீனாட்சிபுரத்தில் இருந்து நெடுங்கண்டத்துக்கு எளிதாக போக முடியும்.
அரை மணி நேரம்
தற்போதைய நிலையில் தேனி மாவட்டத்தின் தேவாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் 70 கிலோ மீட்டர் சுற்றி ஏலக்காய் தோட்ட வேலைக்காக கேரளாவுக்கு செல்கிறார்கள். ஆனால் சாக்குலூத்து மெட்டு வழியாக இவர்கள் வெறும் ½ மணி நேரத்தில் கேரளாவுக்கு செல்ல முடியும். இதுவரை இருந்த நடைபாதையை வனத்துறையினர் சரியாக பராமரிக்காத காரணத்தால் புதர்மண்டி காணப்படுகிறது.
தேவாரம் பாதை
தேனி மாவட்டம் சுற்றுலா ரீதியாக மேம்பட வேண்டும் என்றால், சாக்கலூத்து மெட்டு மலைப்பாதை முக்கியமான திட்டமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய தேவாரம், இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும். தேனி மாவட்டத்திற்கு கேரளாவில் இருந்து எளிதாக வர முடியும். தேனி மருத்துவக்கல்லூரிக்கு கேரள மக்கள் ஒரு மணி நேரத்தில் போய்விட முடியும்.
தங்கதமிழ்செல்வன்
இந்நிலையில் சாக்கலூத்து மெட்டு பாதை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தங்க தமிழ்செல்வன் எம்பி நேற்று நடைபயணம் மேற்கொண்டார். இதுபற்றி அவர் வெளியிட்ட பதிவில், "தேனி மாவட்டத்தில் உள்ள 50 கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாக்குலூத்து மெட்டுரோடு அமைக்க ஒன்றிய அரசை வலியுறுத்தும் விதமாக, தேவாரம் அடிவாரத்திலிருந்து சாக்குலூத்து மெட்டை நோக்கி கவன ஈர்ப்பு நடைப்பயணம் மேற்கொண்டோம். கேரளா வரை நடந்தே சென்று இடுக்கி எம்.பி, எம்.எல்.ஏ ஆகியோரை சந்தித்து சாலை அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் முன்னிலையில் ஆலோசனை நடத்தினோம்" என்று பதிவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் மனது வைத்தால் இந்த திட்டம் ஒரே நாளில் ஓகே ஆகிவிடும். அரசு தான் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications