போடியில் நான் ஜெயிச்சுருந்தா.. இந்நேரம் அமைச்சராகியிருப்பேன்! ஆசையை வெளிப்படுத்திய தங்க தமிழ்செல்வன்
தேனி: போடி சட்டமன்ற தேர்தலில் கூடுதல் வாக்கு பெற்று வெற்றி பெற்று இருந்தால் அமைச்சராக கூட ஆகியிருப்பேன் எனவும், ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றேன், எல்லா ஒன்றியங்களிலும் திமுக முன்னிலை பெற்றது என தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் மாற்று கட்சியை சேர்ந்த 1000 நபர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி நிர்வாகியும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மனுமான மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் தான் மாற்றுக் கட்சியை சேர்ந்த நபர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு மாற்றுக் கட்சியை சேர்ந்த நபர்களை திமுகவில் இணைத்து கொண்டு வரவேற்றார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன்," போடி சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒன்றியத்திலும் திமுக முன்னிலை பெறவில்லை. இதனால் 9,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன். கூடுதல் வாக்குகள் வெற்றி பெற்றிருந்தால் அமைச்சராக கூட ஆகி இருப்பேன். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றேன் எல்லா ஒன்றியங்களிலும் திமுக முன்னிலை பெற்றது.
2026 சட்டமன்றத் தேர்தலையும் திமுகவில் தற்போது இருக்கக்கூடிய இதே கூட்டணி தொடரும்.ஒரு கோடியே 50 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை கொடுக்கப்பட்டு வருகிறது எந்த முதலமைச்சராலும் செய்ய முடியாததை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார். மகளிர் உரிமைத்தொகை கொடுப்பதற்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.
என்னிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து மக்களிடம் கொடுக்கச் சொன்னால் அதில் நான் 200, 300 ரூபாய் எடுத்துவிட்டு தான் கொடுப்பேன். நீங்களும் கிடைத்தவரை போதும் என வெளியில் சொல்ல மாட்டீர்கள். இது போன்ற தவறுகள் நடக்காமல் வங்கி மூலம் அனைத்து மக்களுக்கும் பணம் முழுமையாக கிடைக்க செய்த ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான்" என தெரிவித்தார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். இதன்மூலம் போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்தார். இந்த தொகுதியில் முதல் முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்றவர் அவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை விட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications