அந்தம்மா ஜெயிலில் இருந்து வர்றதுக்குள்ளே அமமுகவே இருக்காது.. தினகரன் மீது தங்க தமிழ்செல்வன் அட்டாக்
Recommended Video
தேனி: "நீங்க வேணும்னா பாருங்க.. இப்படியே போனால், அந்தம்மா ஜெயிலிலிருந்து வர்றதுக்குள்ளே தமிழ்நாட்டில் அமமுக என்ற கட்சியே இருக்காது.. அவ்வளவும் ஆணவம்.. இந்த ஆணவத்தினாலேயே கட்சியை அழித்துவிட்டார்.. நம்பியவர்களையும் ஏமாற்றிவிட்டார்" என்று டிடிவி தினகரன் குறித்து தங்க தமிழ்செல்வன் கருத்துதெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா காலத்தில் தேனியில் ஓபிஎஸ்-க்கு அடுத்தபடியாக செல்வாக்கில் இருந்தார் தங்க தமிழ்செல்வன். துணை முதல்வர் உட்பட பல பொறுப்புகளை ஓபிஎஸ்-க்கு ஜெயலலிதா கொடுத்ததற்கு காரணம், கட்சியில் அவருக்கு இருந்த மரியாதை, ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ்-க்கு இருந்த உண்மையான விசுவாசம்.
பலமுறை ஓபிஎஸ்-ன் விசுவாசத்தை கண்டு ஜெயலலிதாவே புல்லரித்து போகவும், அவர் மறைவுவரை, ஓபிஎஸ்-க்கு அடுத்த கட்டத்தில்தான் தங்க தமிழ்செல்வனை வைத்திருந்தார்.

தோல்வி
இருந்தாலும், டிடிவி தினகரன் ஆர்கே நகர் வெற்றிக்குபிறகு உச்சியில் இருந்த நேரம், தேனியில் ஓபிஎஸ்-க்கு நிகரான இடத்தை தங்க தமிழ்செல்வன் கொண்டு வந்தார். ஆனால் இது எல்லாம் அமமுக தேர்தலில் தோற்கும்வரையே நீடித்தது!

கொள்கை பரப்பு செயலாளர்
5 மாதத்துக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்து கொண்டார். இதன்பிறகு, தேனியில் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை கூட்டி ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களையும் திமுகவில் இணைத்தார். மாவட்ட செயலாளர் பதவி தரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பதவியே தேடி வந்தது.

தேய்மானம்
இப்போதும், தேனி மாவட்டத்தில் திமுகவை பலப்படுத்தும் முயற்சியில் தங்க தமிழ்செல்வன் ஈடுபட்டு வருகிறார். தேனியில் பலம் வாய்ந்த இடத்தில் அமமுக இருந்த நிலையில், அதிலும் தேய்மானம் ஏற்பட்டு வருகிறது. பலர் அதிமுகவுக்கும், பலர் திமுகவுக்கும் என கட்சி தாவி வருகிறார்கள்.

டிடிவி தினகரன்
இதுசம்பந்தமாக தங்க தமிழ்ச்செல்வன் கருத்து சொல்லும்போது, "தன்னை ஒரு பெரிய அரசியல் தலைவர் போல் டிடிவி தினகரன் இமேஜை வளர்த்து கொண்டாரே தவிர, கட்சியை வளர்க்க போதுமான ஆர்வம் காட்டவில்லை. கூடவே 2 ஜால்ராக்களை வைத்து கொண்டு, அவர்களின் பேச்சை கேட்டு செயல்டுகிறார். அதனால்தான் அக்கட்சி அழிந்து வருகிறது.

ஆணவம்
அமமுகவில் உள்ள பொறுப்பாளர்கள் மாற்று கட்சிகளுக்கு தான் போய் வருகிறார்கள். அதிலும் நிறைய பேர் திமுக பக்கம் தான் வருகிறார்கள். இப்படியே இதே தொடர்ந்தால், அந்தம்மா ஜெயிலில் இருந்து வருவதற்குள், அமமுகவே இருக்காது. வெறும் பெயர் மட்டும்தான் இருக்கும். இதுக்கெல்லாம் ஆணவம்தான் காரணம்.. அந்த ஆணவத்தின் மூலமே தனது கட்சியை அழித்து விட்டதுடன், நம்பி வந்தவர்களையும் ஏமாற்றி விட்டார்" என்றார்.












Click it and Unblock the Notifications