தேனி அருகே அகமலை மக்கள் ஆவேசம்.. மலைப்பகுதியை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, சொக்கனலை, அண்ணாநகர், பட்டூர், பேச்சியம்மன் சோலை, கரும்பாறை, எருமைத்தொழு உள்ளிட்ட மலைப்பகுதி மக்களை, மலையை விட்டு வெளியேற்றும் வனத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கிராம மக்கள் போராட்டம் நடத்திய கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சோத்துப்பாறை அணை இருக்கிறது. இந்த அணைக்கு மேலே மலைப்பகுதியில் போடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகமலை ஊராட்சி இருக்கிறது. போடி தொகுதிஎன்றாலும், வாகனங்களில் செல்ல வேண்டும் என்றால், பெரியகுளம் சோத்துப்பாறை வந்து , அதன்பிறகு மலைச்சாலையில் செல்ல வேண்டும. இந்த ஊராட்சியில் அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, சொக்கனலை, அண்ணாநகர், பட்டூர், பேச்சியம்மன் சோலை, கரும்பாறை, எருமைத்தொழு உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியின மலைவாழ் மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் தங்களது கிராமங்களில் உள்ள தோட்டங்களில் காபி, ஏலக்காய், திணை, கேழ்வரகு, ஆரஞ்சு, மலை வாழை, எலுமிச்சை, மிளகு, நெல், அவகோடா, மாதுளை உள்ளிட்ட பயிர்களை பல ஆண்டுகளாக பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அகமலை ஊராட்சியில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு வனத்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
அந்த நோட்டீஸில் மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களது நிலங்களுக்கு பட்டா வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இங்கு வசிக்க முடியும். எனவே பட்டா இல்லாதவர்கள் மலைப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், அந்த நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மலையை விட்டு வெளியேற முடியாது என்று திட்டவட்டமாக தெரித்தனர். மேலும் அண்மையில் தேனி மாவட்ட கலெக்டரை சந்தித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்தநிலையில் மலைவாழ் விவசாய சங்க தலைவர் செல்வராஜ், தலைமையில் விவசாயிகள் மற்றும் மலைக்கிராம மக்கள் நேற்று காலை சோத்துப்பாறை அணை பகுதியில் உள்ள சாலையில் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மலைப்பகுதியை விட்டு வெளியேற்ற முயற்சிப்பதாக வனத்துறையினரை கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் சோத்துப்பாறைக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அந்த பஸ்சை சிறை பிடித்தனர். மேலும் அந்த வழியாக வந்த ஜீப், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களையும் அவர்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரியகுளம் டிஎஸ்பி நல்லு, தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதேபோல் பெரியகுளம் வனசரகர் ஆதிரை தலைமையிலான வனத்துறையினரும் மறியல் செய்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மலைக்கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது கிராம மக்கள் கூறுகையில், "பல நூற்றாண்டுகளாக நாங்கள் இந்த மலைப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் பூமி இது. இதைவிட்டு நாங்கள் வெளியேற மாட்டோம். நில நிர்வாக ஆணையத்தின் மூலம் அளவீடு செய்யப்பட்டதில் சிலருக்கு மட்டும் உரிமை பட்டா கொடுத்தார்கள். இதுகுறித்து தெரியாததால் பலர் பட்டா பெறவில்லை. இப்போது வனத்துறை பட்டா இல்லாதவர்களை மலைப்பகுதியை விட்டு வெளியேற்றுவது எந்தவிதத்தில் நியாயம் இல்லை.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசுக்கு பலமுறை புகார் மனுக்கள் அளித்திருந்தோம். முன்பு இருந்த தேனி மாவட்ட கலெக்டர், அகமலை பகுதியில் மீண்டும் சர்வே செய்து பட்டா பெறாதவர்களுக்கு உரிமை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தெரிவித்தார். அதனையும் இதுவரை அமல்படுத்தவில்லை. எனவே எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்" என்று கூறினார்கள்.
அப்போது போலீசார் மற்றும் வனத்துறையினர், இதுதொடர்பாக அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து மலைக்கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications