தேனியில் "அந்தரத்தில்" தொங்கிய கத்தி.. அது பாட்டுக்கு போடி கோயிலில் அசால்ட்டா நிக்குது! ஒரே பூரிப்பு
தேனி: தேனி போடியில் நடந்த கோயில் திருவிழா ஒன்று, இணையத்தில் பரவி பக்தர்களுக்கு சிலிர்ப்பை தந்து வருகிறது. என்ன காரணம்?
தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள கோயில்களும், தனிசிறப்பும், தனிப்பெருமையும் பெற்றது.. இந்த கோயில்களுக்கென்றே தனித்தனி வரலாறுகள் உண்டு.. பின்னணி காரணங்களும் உண்டு.
வழிபாடுகள்: இவைகளை நினைவுகூர்ந்து பக்தர்கள், வழிபாடுகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.. இதில், முக்கியமானது தேனி மாவட்டம் போடி நகரில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில். இதனை ஸ்ரீ மது ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயம் என்றும் சொல்வார்கள். போடிநாயக்கனூரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த சவுடேஷ்வரி அம்மன் கோயில், நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும்...

மற்ற வருடங்களில் வருடா வருடம் திருவிழா நடக்கும் என்றால், இந்த கோயிலில் மட்டும் "பெரிய கும்பிடு திருவிழா" என்ற பெயரில் 12 வருடங்களுக்கு ஒரு முறை திருவிழா நடக்கும்.. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிபாடு செய்வார்கள். அந்தவகையில், தற்போது இந்த விழா ஆரம்பமாகி உள்ளது.
ஆற்றங்கரை: நேற்றைய தினம், சௌடேஸ்வரி அம்மனை கொட்டக்குடி ஆற்றங்கரையிலிருந்து உருவேற்றி கோயிலுக்குள் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட குதிரையில் அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.. அப்போது, அம்மனின் கத்தியை, குதிரையில் வைத்து மேளதாளங்கள், செண்டை மேளம், உருமி மேளம் முழங்க, ஊர்வலமாக கொண்டுவருவது இந்த விழாவின் முக்கிய சிறப்பம்சமாகும்.

அப்போது பக்தர்களும், இதற்காகவே விரதம் இருந்து , தங்களது உடலில் கத்தி போட்டு அம்மனை வேண்டி, அழைத்து வழிபட்டனர்... அப்போது திடீரென 2 குழந்தைகளுக்கு அம்மனின் அருள் வந்துவிட்டது. அப்போது, 2 குழந்தைகள் பிரார்த்தனையிட்டு வேண்டி, அம்மனை வருந்தி அழைத்து வந்ததை பார்த்து அங்கிருந்த பக்தர்கள் பூரித்து போய்விட்டார்கள்..
பலத்த மழை : இந்த ஊர்வலம் புறப்பட்டதுமே, மழையும் கொட்ட துவங்கிவிட்டது. இதனால் பக்தர்கள் மழையில் நனைந்தபடியே ஊர்வலத்தில் பரவசத்துடன் ஆடி வந்தனர். குதிரையின் மேல் கத்தி வைத்துக்கொண்டு, கோயிலுக்குள் நுழைந்து அம்மனை வழிபட்டனர்...
இந்த திருவிழாவில் இன்னொரு அதிசயமும் நடந்தது. அதாவது, அம்மனின் கத்தி, கருவறைக்குள் சென்று வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டிருந்தது..

அதிசயம்: அப்போது, உடலில் கத்தி போட்டு ஆடி வந்த பக்தர்கள் ஆமணக்கு முத்துக்குவியல் வைக்கப்பட்டிருந்த பானை மீது புனித தீர்த்தங்களை ஊற்றி, அந்த கத்தியை நிற்க வைத்தனர். அப்போது எந்தவித பிடிமானமும் இல்லாமல், அந்த கத்தி, பானை மீது அப்படியே அந்தரத்தில் நின்றிருக்கிறது.. இதைப்பார்த்த பக்தர்கள் மெய்சிலிர்த்து போய்விட்டார்கள்..
இந்த விழாவில் இன்னொரு ஹைலைட்டும் உண்டு.. இந்த குதிரை ஆலயத்திற்குள் நுழையும் போது பெண்களுக்கு அனுமதி கிடையாது.. ஆண்கள் மட்டுமே இந்த பூஜையில் பங்கேற்கப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications