இளைஞர்களுக்கு தமிழக அரசு 3 மாதங்களுக்கு ஒரு முறை தரும் தொகை.. தேனி கலெக்டர் விளக்கம்
தேனி: வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பதிவு செய்து, 31.3.2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 5 ஆண்டுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி காலாண்டிற்கு ஒரு தொகை என ஒராண்டிற்கு 7200 ரூபாய் வரை அரசு வழங்குகிறது. மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 ஆண்டுகள் இந்த உதவி தொகையை பெற முடியும்.. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலை இல்லாமல் காத்திருப்போருக்கு தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் நிலையான வேலைவாய்ப்பு இல்லாமல் கூலி வேலை செய்யும் இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம். எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் அந்தந்த மாவட்டங்களில் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், பதிவு செய்து, 31.3.2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 5 ஆண்டுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான இத்திட்டத்தின்படி காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி கல்வித்தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.900, மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,200, பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,800 என 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு செய்திருந்தாலே போதுமானது. இவ்வாறான மனுதாரர்களின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.600, மேல்நிலை கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.750, பட்டதாரிகள் எனில் ரூ.1,000 என 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் இந்த உதவித்தொகை பெற முடியாது. எனவே தகுதியுள்ள நபர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தை இலவசமாக பெற்றும் பூர்த்தி செய்து கொடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதிகள் உள்ளவர்கள் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்து கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பத்தை பெற முடியும். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் ஆண்டு முழுவதும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த உதவித்தொகை பெறுபவர்களின் அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் இந்த உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications