இனிக்க இனிக்க பேசி.. டாக்டருக்கு அல்வா கொடுத்த தேனி நந்தினி! பேக்ரவுண்ட் மோசம்.. கல்யாண ராணியாமே!
தேனி: தேனியில் பேஸ்புக் மூலம் பழகி மருத்துவரை காதலித்து திருமணம் செய்து சுமார் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நந்தினி என்ற இளம் பெண் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். காதலிப்பது போல் பேசி திருமணம் செய்து பின்னர் மிரட்டல் விடுத்து பலரிடம் பணம் பறித்து வந்தவர் இந்த கல்யாண ராணி என கூறப்படுகிறது. போலீசார் இவர்களை கைது செய்தால் தான் பல அதிர்ச்சி தரும் பின்னணி தெரியவரும் என்கின்றனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திர பிரசாத் தற்போது சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் நந்தினி என்ற பெண் அவரிடம் நட்பாக பழகி இருக்கிறார். தான் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் என அறிமுகம் செய்துள்ளர்.
தொடர்ந்து அவரது புகைப்படங்களுக்கு லைக் கொடுப்பது மெசஞ்சரில் மெசேஜ் அனுப்புவது என நெருங்கி பழகி இருக்கிறார். தொடர்ந்து செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்ட நிலையில் அவரை காதலிப்பதாக கூறியிருக்கிறார்.

நந்தினியின் புகைப்படங்களை பார்த்த நரேந்திர பிரசாத்தும் அவரது காதலை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இருவரும் பேஸ்புக் மூலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நந்தினி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூற அவரை சென்னைக்கு வரவழைத்த நரேந்திர பிரசாத் கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்திருக்கிறார். ஆனால் அப்போது புகைப்படம் எதுவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணத்திற்கும் மூன்று பேர் மட்டுமே வந்திருந்தனர்.
அவர்களில் நந்தகுமார், முருகேசன், நாகர்கோயில் ரிகர்சன் ஆகியோர் என கூறப்படுகிறது. அவர்களில் நந்தகுமார் மாவட்ட நீதிபதி எனவும், ரிகர்சன் வழக்கறிஞர் எனவும், முருகேசன் சென்னையில் பல அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பில் இருக்கும் நபர் என அறிமுகம் செய்துள்ளார். இவர்களை வைத்து எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துக் கொள்வோம் என நந்தினி கூறிய நிலையில் திருமணத்திற்கு பிறகு இருவரும் ஒன்றாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
அப்போது எதார்த்தமாக நந்தினியின் ஆதார் அட்டையை பார்த்தபோது அவரது சொந்த மாநிலம் கேரளா என தெரியவந்தது. இது குறித்து கேட்டபோது தனக்கு போலீஸ் அதிகாரிகளை தெரியும் என்னை கற்பழித்ததாக பொய் புகார் அளித்து உன்னை சிறையில் அடைத்து விடுவேன் என மிரட்டி 5 லட்சத்தை பெற்றிருக்கிறார். மேலும் வழக்கறிஞர் ரிகர்சனுக்கு பணம் அனுப்ப வேண்டுமென 4 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மிரட்டி வாங்கி இருக்கிறார்.
இதற்கிடையே தான் நந்தினி பல ஆண்களுடன் பேசிக் கொண்டிருப்பதை நரேந்திர பிரசாத் கண்டுபிடித்திருக்கிறார். இது குறித்து கேட்டபோது பல ஆண்களுடன் நான் அப்படித்தான் பேசுவேன் என்னுடன் வாழாவிட்டால் முகநூலில் போஸ்ட் போட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என மிரட்டி இருக்கிறார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நரேந்திர பிரசாத் இது தொடர்பாக தேனி எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் நந்தினி நரேந்திர பிரசாத்தை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதும், மாவட்ட நீதிபதி, வழக்கறிஞர்கள் என அறிமுகம் செய்து வைத்த அனைவருமே போலி நபர்கள் என்பதும் தெரிய வந்தது. மொத்தம் 10 லட்சம் ரூபாயை நந்தினி மோசடி செய்த நிலையில் இதேபோல பலரிடம் அவர் கைவரிசை காட்டி இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நந்தினி உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications