தேனியில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டம்.. டிபன் பாக்ஸை திறந்ததுமே ஆடிப்போன தூய்மை பணியாளர்! நிஜமா
தேனி: தேனி பெண் தொழிலாளிக்கு நேர்ந்துள்ள துயரம், தமிழகத்தையே அதிர வைத்து வருகிறது.. அத்தனை அழுக்குகளையும் தன் கைகளால் அள்ளி சுத்தம் செய்யும் உழைப்பாளிகளுக்குத் தமிழக அரசு வழங்கும் காலை உணவுத் திட்டம் பெரும் கனவாக தொடங்கப்பட்டது. ஆனால், தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் அரங்கேறியுள்ள அலட்சியம், மனிதநேயத்தையே தலைகுனிய வைத்துள்ளது... இந்த செய்தியின் உண்மைத்தன்மை தெரியவில்லை.. ஆனால் இது தொடர்பான தகவல்கள் சோஷியல் மீடியாவில் பரவவும், சமூக ஆர்வலர்களும் இதுகுறித்து குரல் கொடுக்க துவங்கி உள்ளனர்.. என்ன நடந்தது தேனியில்?
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 179 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பிப்ரவரி 9ம் தேதி முதல் காலை உணவு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது.

நேற்றைய தினம் காலை நேரம், போடி பகுதியில் உள்ள சமையல் கூடத்தில் உணவு தயாரிக்கப்பட்டு, ஹாட் பாக்ஸ்கள் மூலம் நகரின் 4 இடங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
தேனி டிபன் பாக்ஸ்
வடகரை 5 வது வார்டில் பணியாற்றும் 56 வயதுடைய குணம் என்ற பெண் தொழிலாளி, நீண்ட நேர களைப்பிற்கு பிறகு பிறகு பசியோடு தனது டிபன் பாக்ஸைத் திறந்துள்ளார். அதில் வழங்கப்பட்ட வெண்பொங்கலில் ஒரு பெரிய கரப்பான் பூச்சி செத்து கிடப்பதைக் கண்டு நிலைகுலைந்து போனார். "சாக்கடையைச் சுத்தம் செய்யும் எங்களுக்கு இந்த அழுக்கு உணவுதான் தகுதியா?" என்ற அந்த பெண்ணின் மௌனக் கேள்வி அதிகாரிகளின் முகத்தில் அறையும் விதமாக உள்ளது.
இப்படித்தான் 2 நாளைக்கு முன்னாடி, கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில், வழங்கப்பட்ட உணவின் அளவு மிகக் குறைவாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. பசியோடு வேலை செய்யும் தங்களுக்கு இந்த குறைவான சாப்பாடு போதாது என அங்குள்ள 118 பணியாளர்கள் முறையிட்டனர்..
கோவை அன்னூர் கோரிக்கை
இதுகுறித்து அன்னுர் தூய்மை பணியாளர்கள் சொல்லும்போது, 'வீதி வீதியாக சென்று குப்பை எடுத்து வருகிறோம். கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்கிறோம். வழங்கப்பட்ட உணவின் அளவு குறைவாக உள்ளது. அளவை உயர்த்தி வழங்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.. இதையடுத்து, தூய்மை பணியாளர்களுக்கு தலா இரண்டு டிபன் பாக்ஸ் வழங்கப்படும் என அதிகாரிகளும் உறுதி தெரிவித்தனர்.
குறைவான சாப்பாடு என்றால் கூட பரவாயில்லை, பெரியகுளத்தில் உணவே விஷமாக மாறியிருப்பதுதான் அதிர்ச்சியை தந்துள்ளது.. கழிவுகளை அகற்றுபவர்கள் என்பதால் அவர்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுவார்கள் என்ற அதிகார வர்க்கத்தின் மெத்தனப் போக்கே இதற்குக் காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்..
சமூக ஆர்வலர்கள்
இந்த விஷயம், பெரியகுளம் நகராட்சித் தலைவர் சுமிதா வரை சென்றது.. உடனே இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று நம்பிக்கை தந்துள்ளார்..
எனினும், பாதிக்கப்பட்ட பணியாளர்களின் மனக்காயம் அவ்வளவு எளிதில் ஆறாது. எளிய மக்களின் வயிற்றில் அடிப்பதும், அவர்களின் உயிருடன் விளையாடுவதும் ஒருபோதும் ஏற்கத்தக்கதல்ல. உழைக்கும் வர்க்கத்தின் தட்டில் விழும் ஒவ்வொரு பருக்கையிலும் அவர்களின் கண்ணீர் கலந்திருக்கிறது என்பதை நிர்வாகம் உணர வேண்டும். இந்த அவலம் குறித்து சமூக ஆர்வலர்கள் கொதித்தெழுந்துள்ளனர். சோஷியல் மீடியாவிலும் இது தொடர்பான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன...!!
சபாஷ் திட்டம் - சூப்பர் அரசு
அரசின் இந்த காலை உணவு திட்டம் லட்சோப லட்சம் மக்களின் பசியை போக்கி கொண்டிருக்கிறது.. அவர்களுக்குச் சரியான நேரத்தில் சூடான உணவு கிடைப்பதை உறுதி செய்கிறது. கடினமான உடல் உழைப்பை தூய்மை பணியாளர்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சத்தான காலை உணவு அவர்களின் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் மேம்படுத்த உதவுகிறது.
மேலும் தினமும் காலை உணவிற்காக அவர்கள் செலவிடும் தொகை மிச்சமாவதால், அது அவர்களின் குடும்பப் பொருளாதாரத்திற்கு ஒரு சிறிய உதவியாகவும் அமைகிறது. எனினும் ஓரிரு இடங்களில் சில குறைகள் முளைத்துவிடுகின்றன. அந்த சில குறைகளையும் நம்முடைய அரசு களைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்..!!












Click it and Unblock the Notifications