தேனி ஹேப்பி ஸ்ட்ரீட்.. நடுரோட்டில் இந்த கொண்டாட்டம் தேவையா? ஓடிவந்த பாஜக.. மகிழ்ச்சி தெரு நடக்குமா?
தேனி: தேனி மகிழ்ச்சி தெரு கொண்டாட்டம் விரைவில் நடக்க போவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், பாஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கலெக்டரிடமும் புகார் மனு தந்துள்ள நிலையில், திடீர் அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
ஹேப்பி ஸ்ட்ரீட் என்பது, மகிழ்ச்சிக்காக கொண்டாப்படும் நிகழ்ச்சியாகும்.. சென்னை, கோவை, தஞ்சாவூர், புதுச்சேரி உள்ளிட்ட பெருநகரங்களில் சமீபகாலமாகவே நடத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் மன அழுத்தம் குறைப்பதற்காகவும், வாரத்தின் முதல் நாளை புத்துணர்ச்சியுடன் துவங்குவதற்காகவும், தமிழக அரசு, சில மாவட்டங்களில், மாநகராட்சி சார்பாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில், காவல்துறையின் பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே நல்லுறவை வளர்ப்பதற்காகவும், மகிழ்ச்சியையும் சமூக உணர்வையும் கொண்டுவருவதற்காகவும் கொண்டு வரப்பட்ட நிகழ்வு இதுவாகும்.
மன அழுத்தம்: பரபரப்பான வேலைப்பளு, மன அழுத்தத்துக்கு நடுவில், மாதம் ஓரிரு முறை நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியானது, இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தெருவில் நடனமாடும்போது, அதுவும் எல்லோரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் நடமாடும்போது, அனைத்து மன அழுத்தமும் நீங்குவதாகவும், போலீஸ் பாதுகாப்புடன் நடப்பதால், எந்தவிதமான குற்ற சம்பவங்களும நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்கள்.
எனினும், இது தேவையில்லாத வேலை, கலாச்சார சீரழிவு என்று சிலர் விமர்சித்து வருகிறார்கள். ரோட்டில் நின்று ஆடுவது சரி கிடையாது, இதற்கு பதிலாக வேறு ஏதாவது நற்காரியங்களை அரசு செய்யலாம் என்று கருத்து கூறுகிறார்கள்.
செம ஏற்பாடு: இந்நிலையில், தேனி பங்களாமேடு பகுதியில் வருகிற 2ம் தேதி, காலை 7:00 மணி முதல் 11 மணி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.. 7 ஒண்டர்ஸ் அமைப்பு சார்பில் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்று வரும்நிலையில், தேனியிலும் நடைபெறுவது பலரது ஆர்வத்தை தூண்டி வருகிறது.
இதனிடையே, இந்த நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என தேனி மாவட்ட பாஜகவினர், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர.. ஹேப்பி ஸ்ட்ரீட் எனும் நிகழ்ச்சியை நடத்துவதால் கலாச்சார சீரழிவு ஏற்படும் என்றும், தேனில் உள்ள பிரதான சாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்படுவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கேள்விக்குறி: அதுமட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதி தரக்கூடாது என்று தேனி நகர பாஜக தலைவர் ரவிக்குமார் தலைமையில் பாஜகவினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவையும் அளித்துள்ளனர்.. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்துவதற்கு தேனி மாவட்ட காவல்துறை அனுமதி தராத நிலையில், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியானது.
இந்நிலையில், தேனில் பிப்ரவரி 2ல் நடக்கவிருந்த ஹேப்பி ஸ்ட்ரீட் எனும் மகிழ்ச்சி வீதி நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்பதால் மகிழ்ச்சி வீதி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications