தேனி மகிழ்ச்சி தெரு.. முதல்முறையாக நடந்த ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம்.. குஷியில் மக்கள் குத்தாட்டம்
தேனி: சென்னை, கோவை, தஞ்சாவூர், புதுச்சேரி உள்ளிட்ட பெருநகரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வரும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற ஆடல், பாடல் நிகழ்ச்சி, தேனியிலும் முதல்முறையாக நடத்தப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நடனமாடினார்கள்.
மகிழ்ச்சி தெரு என்று சொல்லக்கூடிய "ஹேப்பி ஸ்ட்ரீட்" என்பது, பொதுமக்களின் மன அழுத்தம் குறைப்பதற்காகவும், வாரத்தின் முதல் நாளை புத்துணர்ச்சியுடன் துவங்குவதற்காகவும், அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியாகும்.

மாநகராட்சி சார்பாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில், காவல்துறையின் பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள், போலீசார் இடையே நல்லுறவை வளர்ப்பதற்காகவும், மகிழ்ச்சியையும் சமூக உணர்வையும் கொண்டுவருவதற்காகவும் கொண்டு வரப்பட்டது என்பதால், இளைஞர்களிடமும், பரபரப்பாக வேலைக்கு செல்வோரிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பாதுகாப்பு: தெருவில் அனைவருடனும் சேர்ந்து ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் டான்ஸ் ஆடுவதால், தங்களது மன அழுத்தம் நீங்குவதாகவும், போலீஸ் பாதுகாப்புடன் நடப்பதால், எந்தவிதமான குற்ற சம்பவங்களும நடக்க வாய்ப்பில்லை என்றும் வரவேற்று சொல்கிறார்கள். ஆனால், இது தேவையில்லாத வேலை, கலாச்சார சீரழிவு என்று சிலர் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில், பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிகழ்ச்சியை நடத்தினால், கலாச்சார சீரழிவு ஏற்படும், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதால், நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதி தரக்கூடாது என்று தேனி நகர பாஜக தலைவர் ரவிக்குமார் தலைமையில் பாஜகவினர் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு தந்தனர்.
முதல்முறை நிகழ்ச்சி: இந்நிலையில், சென்னை, கோவை, தஞ்சாவூர், புதுச்சேரி உள்ளிட்ட பெருநகரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வரும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற ஆடல், பாடல் நிகழ்ச்சி, தேனியிலும் முதல்முறையாக நடத்தப்பட்டுள்ளது.
முத்துதேவன்பட்டி வீரபாண்டி சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விளையாட்டு, மேஜிக் ஷோ, உள்ளிட்ட பல அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பரதநாட்டியம், இசை நிகழ்ச்சி என நிகழ்ச்சி களைகட்டியது. இதில் பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர்.
குத்தாட்டம்: முன்னதாக இதற்காக போடி விலக்கில் இருந்து வீரபாண்டி பிரிவு வரை ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து செல்லும் போது டூவீலர்களை எடுக்கும் போது இடித்துக் கொண்டதால் இளைஞர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கண்காணித்து விரட்டினார்கள்.












Click it and Unblock the Notifications