அரசு வேலை தருவதாக ரூ.14.5 லட்சம் மோசடி! தட்டிக்கேட்டவரை கொல்ல முயன்ற கும்பல்! தேனியில் நடந்தது என்ன?
தேனி: தேனியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14.5 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் புகாரளித்த இளைஞர் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இடத்தில் காவலர் மற்றும் பொது மக்களின் உதவியால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிர் பிழைத்திருக்கிறார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். இவர் மற்றும் இவரது நண்பர்கள் சிலரிடம், அதே பகுதியைச் சேர்ந்த மாயன் என்பவர் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.14.50 லட்சம் வசூல் செய்துள்ளார். தொடர்ந்து அவர்களை சென்னைக்கு அழைத்துச் சென்று, அரசுத் துறைகளின் பெயரில் போலி பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளார்.

ஆனால் பணம் கொடுத்து மாதங்கள் கடந்த பின்னரும் கூட வேலை கிடைக்காததால், பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பணத்தைத் திரும்பக் கேட்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பணம் மோசடியில் ஈடுபட்ட மாயன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர் ராகுலை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் ராகுல் பேசுகையில், நான் பிஇ சிவில் இன்ஜினியர் முடித்துவிட்டு பைனான்ஸ் கம்பெனியில் வேலை பாத்து வருகிறேன். மாயன் என்பவர் என்னிடமும், என் நண்பர்களிடமும் ரூ.14.50 லட்சம் வாங்கிட்டு, போலி பணி நியமன ஆர்டரைக் கொடுத்து ஏமாற்றிவிட்டார். நாங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தோம்.
இதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு தகவல் சென்றதுமே, அவர் எங்களை தீர்த்துக் கட்டுவதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்தார். நேற்று காலை நான் வேலைக்குச் செல்லும் வழியில், என் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றார். அங்கிருந்த காவலர் மற்றும் பொதுமக்கள் என்னை மீட்டனர். அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
புதுக்கோட்டை அரசு ஐடிஐயில் வேலை.. 8 ஆம் வகுப்பு தகுதி! மாதம் 58 ஆயிரம் சம்பளம்! பட்டைய கிளப்புங்க
போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்க முயன்ற மாயன், தனது காரால் பாதிக்கப்பட்ட இளைஞர் ராகுல் மீது மோதி கொலை செய்ய முயன்று இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இளைஞர் ராகுலை ஆயுதங்களுடன் விரட்டியுள்ளார். தற்செயலாக அங்கு வந்த காவலர் ஒருவர் காப்பாற்றியதால் ராகுல் உயிர் தப்பினார்.
இந்த விவகாரத்தில் முதற்கட்டமாக சிலரை கைது செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சருத்துப்பட்டியைச் சேர்ந்த மாயனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுபோன்று பல கோடிக்கணக்கில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ள இந்த கும்பலை கைது செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications
