சவுக்கு சங்கர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்..கஞ்சா வழக்கில் அதிரடி! தேனி போலீசார் ஆக்சன்!
தேனி: விரைவில் சவுக்கு சங்கர் விடுதலையாவார் என கூறப்பட்ட நிலையில், அவர் மீது மீண்டும் ஒரு குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதாவது பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் தேனியில் இருந்த சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்ய சென்ற போது அவரிடம் கஞ்சா இருந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக தேனி போலீசார் தனியாக வழக்கு பதிவு செய்து கஞ்சா வழக்கிலும் சவுக்கு சங்கரை கைது செய்த நிலையில், குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

சவுக்கு சங்கர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கோவை அழைத்து சென்றனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுக்கு சங்கர் மீது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின. இதனையடுத்து சங்கர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த நிலையில் சங்கர் மீதான பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்கள் அவருக்கு ஜாமீன் வழங்கியது சவுக்கு சங்கர் விரைவில் சிறையில் இருந்து வெளி வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஊட்டி புதுமந்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அலி ராணி அளித்த புகாரின் பேரில் உதகை சைபர் கிரைம் போலீசார் மே 7ஆம் தேதி வழக்கு பதிவு செய்து 28ஆம் தேதி கைது செய்தனர். இந்த நிலையில் இன்று சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அல்லிராணி அளித்த புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதனால் இந்த வாரத்தில் சவுக்கு சங்கர் விடுதலையாவார் என கூறப்பட்ட நிலையில், அவர் மீது மீண்டும் ஒரு குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதாவது பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் தேனியில் இருந்த சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்த சென்ற போது அவரிடம் கஞ்சா இருந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக தேனி போலீசார் தனியாக வழக்கு பதிவு செய்து கஞ்சா வழக்கிலும் சவுக்கு சங்கரை கைது செய்தனர்.
அது மட்டும் அல்லாமல் சவுக்கு சங்கரின் உதவியாளர், கார் டிரைவர் உள்ளிட்டோர் மீது கஞ்சா வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை தனியே நடைபெற்று வரும் நிலையில் சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக அடுத்தடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தேனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் இந்த வழக்கினை விசாரித்து வருகிறார். இதற்கிடையே சவுக்கு சங்கர் மீது குண்டார் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது தேனி மாவட்ட காவல்துறை. இதற்கான பரிந்துரையை தேனி எஸ்பி வழங்கியுள்ள நிலையில் ஒப்புதல் அளித்திருக்கிறார் தேனி மாவட்ட ஆட்சியர்.
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கான உத்தரவு புழல் சிறையில் இருந்து மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு நேரில் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை சிறைத்துறை வட்டாரங்கள் மேற்கொண்டுள்ளன. அது மட்டும் அல்லாமல் சவுக்கு சங்கருக்கு கஞ்சா வந்தது எப்படி என்பது குறித்தும், வட மாநிலங்களில் இருந்து கஞ்சா வழங்கியதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications