இஎம்ஐயில் பைக் வாங்க போறீங்களா.. தேனியில் தனியார் நிதி நிறுவனத்திற்கு நடந்த தரமான சம்பவத்தை பாருங்க
தேனி: தேனி அருகே தனியார் நிதி நிறுவனத்தில் இஎம்ஐக்கு இரு சக்கர வாகனம் வாங்கிய மீன் வியாபாரி தேனி நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், குறிப்பிட்ட தனியார் நிதி நிறுவனத்திற்கு ரூ.85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனியார் நிதி நிறுவனம் அப்படி என்ன தவறு செய்தது என்பதை இப்போது பார்ப்போம்.
தேனி அரண்மனைப்புதூரை சேர்ந்த ராஜா என்ற மீன் வியாபாரி கடந்த 2018-ம் ஆண்டு தேனியில் உள்ள ஒரு தனியார் பைக் ஷோரூமில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள புதிய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கினார். அதற்கு மீன் வியாபாரி ரூ.39 ஆயிரம் முன்பணம் செலுத்தி உள்ளார். மீதி பணத்தை தனியார் நிதி நிறுவனத்தில் தவணை கடனில் பெற்றுள்ளார்.

புதிய பைக் வாங்கி ஓட்டி வந்த மீன் வியாபாரி ராஜா, அதற்கான கடன் தொகையை மாதாந்திர தவணையாக தனியார் நிதி நிறுவனத்திற்கு திருப்பி செலுத்தி வந்தார். பின்னர் கொரோனாபாதிப்பு ஏற்பட்டபோது தவணைத்தொகை செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் நிதி நிறுவனத்தின் ஊழியர் வந்து கேட்டதால், பாக்கி இருந்த ரூ.56 ஆயிரத்தை ஒரே தவணையாக செலுத்தினார்.
அதற்கு ஊழியர், கணினி ரசீது கொடுக்காமல், கையால் எழுதிய ரசீது கொடுத்துச் சென்றுள்ளார. சரி கடனை செலுத்தி விட்டோமே, வாகனத்துக்கான தடையில்லா சான்று பெறலாம் என்று ஷோரும் போன போது, அந்த நிதி நிறுவனம் தடையில்லா சான்று தரமறுத்துவிட்டது. இந்நிலையில் பணத்தை வசூல் செய்து சென்ற ஊழியர் அதை நிறுவனத்தில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதனால், ராஜாவின் மோட்டார் சைக்கிளை நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பறிமுதல் செய்து திரும்ப எடுத்துக் கொண்டனர். மீண்டும் திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளார்கள். இதுகுறித்து தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மீன் வியாபாரி ராஜா சார்பில் வக்கீல் எஸ்.பி.பாண்டியன் என்பவர் தனியார் நிதி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். அதில், மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூம் நிர்வாகம், நிதி நிறுவன கிளை மேலாளர் ஆகியோரை எதிர்மனுதாரராக குறிப்பிட்டார். இந்த மனு மீது நீதிபதி சுந்தர், உறுப்பினர் சவுந்தரராஜன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணை நடந்தது.
விசாரணையை தொடர்ந்து தேனி மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மீன் வியாபாரி ராஜாவுக்கு சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மோட்டார் சைக்கிளுக்கான தொகை ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை ஒரு மாதத்துக்குள் கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரம், சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications