திருமண செயலியால் மீள முடியாத புதை குழியில் விழுந்த தேனி இளைஞர்.. போலீஸ் சொன்ன பெரிய உண்மை
தேனி: தேனியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகனான பட்டதாரி வாலிபருக்கு திருமணம் செய்வதற்காக சில மாதங்களுக்கு முன்பு ஒரு திருமண செயலியில் வரன் பார்த்தார். அவரை ஏமாற்றிய 88 லட்சம் ரூபாயை ஒரு கும்பல் பறித்துள்ளது. இதையடுத்து மோசடி கும்பல் விரிக்கும் வலையில் சிக்காமல் இருக்க திருமண செயலியில் வரன் தேடுபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேனி சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தேனியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகன் இன்ஜினியர் ஆவார். அவருக்கு திருமணம் செய்வதற்காக சில மாதங்களுக்கு முன்பு ஒரு திருமண செயலியில் வரன் பார்த்துள்ளார்கள். அப்போது ஒரு பெண்னின் புகைப்படம் மிக அழகாகவும், பெரிய தகவல்களுடன் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த உடன் தேனி இன்ஜினியருக்கு அந்த பெண்ணை பிடித்துப் போனது. அந்த பெண் குறித்த விவரங்களில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தேனி இன்ஜினியர் பேசியிருக்கிறார். அப்போது வாட்ஸ்- அப் வீடியோ கால் மூலமாகவும் அந்த பெண்ணிடம் தேனி இன்ஜினியர் பேசினாராம்.

ஆனால் இனிக்க இனிக்க பேசிய பெண், அவரை மீண்டுவரவே முடியாதபடி ஒரு புதைகுழியில் தள்ளியிருக்கிறார். ஏனெனில் தேனி இன்ஜினியர் அந்த பெண் கூறியபடி கிரிப்டோ வர்த்தகத்தில் ரூ.88 லட்சத்து 58 ஆயிரத்து 988 முதலீடு செய்து அந்த பணத்தை பறிகொடுத்திருக்கிறார். அதன்பிறகு அந்த பெண்ணை அவரால் தொடர்பு கொள்ள தேனி இன்ஜினியரால் முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
எப்படி சிக்கினார்கள்
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது, தேனி இன்ஜினியர் பணம் அனுப்பிய வங்கிக் கணக்குகள் 2 பெண்களின் பெயரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அந்த பெண்களை கண்டுபிடித்து போலீசார் விசாரணை விசாரித்த போது, ஈரோடு வி.வி.சி.ஆர்.நகரை சேர்ந்த 30 வயதாகும் நந்தகோபால் என்பவர் தங்கள் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கி அதன் விவரங்களை வாங்கிக் கொண்டதாகவும், அதற்கு கமிஷனாக ரூ.2 ஆயிரம் கொடுத்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து நந்தகோபாலை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர்.
4 பேர் கைது
நந்தகோபால் மற்றவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை விலைக்கு வாங்கி அவற்றை கோவை காந்திபுரத்தை சேர்ந்த பத்மநாபன் ஈரோடு கிரிணாம்பாளையத்தை சேர்ந்த 32 வயதாகும் சிவா என்பவருக்கு தந்தார்களாம். இதையடுத்து யுவராஜன், பத்மநாபன், சிவா ஆகியோரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
கம்போடியா கும்பல்
யுவராஜன், பத்மநாபன் ஆகியோர் கம்போடியோ நாட்டை சேர்ந்த மோசடி கும்பல்களுடன் நேரடி தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நந்தகோபால், யுவராஜன், பத்மநாபன், சிவா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருமண தகவல் செயலி பெயரில் இதுபோன்று அதிக அளவில் மோசடி நடந்து வருவதாகவும், அதன் பின்னணியில் ஒரு பெரிய கும்பல் இயங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பெண்கள் புரொபைல்
இதுபோன்ற மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தேனி சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தேனி சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து அதை திருமண தகவல் செயலிகளில் பதிவேற்றம் செய்து போலியான கணக்கை சிலர் தொடங்குகிறார்கள்.
நேரில் விசாரியுங்கள்
அதனை வைத்து மோசடி திட்டத்தை சில கும்பலை சேர்ந்தவர்கள் அரங்கேற்றி உள்ளார்கள். திருமண செயலிகளில் சுயவிவரம் அதிகமாக மெருகூட்டப்பட்டதாக தோன்றினாலோ, உண்மையான தனிப்பட்ட விவரங்கள் இல்லாவிட்டாலோ பெண் பார்ப்பவர்கள் நிச்சயம் தீர விசாரிக்க வேண்டும். வீடியோ கால் மூலம் பேசி மட்டும் உறுதி செய்யாமல் நேரில் சந்திப்பு மூலம் உறுதி செய்வது நல்லது. அவ்வாறு நேரில் சந்தித்து சரிபார்க்க முடியாவிட்டால் உடனே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்..
தேனி போலீஸ் வார்னிங்
அதேபோல் பெண்கள் பெயரிலோ அல்லது யாராவது உங்களிடம் முதலீட்டில் அதிக லாபத்தை தருவதாக கூறும் கவர்ச்சிகரமான தகவல்களை நம்ப வேண்டாம். தெரியாத நபர்களிடம் தொலைபேசியில் தனிப்பட்ட அல்லது நிதி சார்ந்த தகவல்களை பகிரவே கூடாது. மோசடி செய்பவர்கள் அவசர உணர்வை உருவாக்கி, சிந்திக்கும் நேரத்தை குறைத்து விடுகிறார்கள். வங்கிக் கணக்குகளை வேறு யாருக்கும் கையாள்வதற்கு நீங்கள் கொடுக்கக்கூடாது. இந்த மோசடியில் யாரேனும் பாதிக்கப்பட்டால் 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை அழைக்க வேண்டும். அல்லது www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்ய வேண்டும்" என்று தேனி போலீசார் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications