கர்நாடகா பக்கம் போய் ரீல்ஸ் போடுங்க சாமி! அணையைத் திறந்து ரீல்ஸ்.. தேனியை மிரள விட்ட தவெகன்ஸ்!
தேனி: தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் தமிழக வெற்றி கழகத்தினர் தன்னிச்சையாக தண்ணீரை திறந்து விட்டு ரிலீஸ் போட்டது பேசு பொருளாக மாறி இருக்கிறது. விஜய் அரசுக்கும் இது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் நிலையில், கர்நாடக பக்கம் சென்று அங்கிருக்கும் அணைகளை திறந்து விடுங்கள் தமிழ்நாட்டுக்காவது தண்ணீர் கிடைக்கும் என கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் பாசன பகுதிகளாக கைலாசபட்டி, லட்சுமிபுரம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 2865 ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் புதிய ஆயக்கட்டு பகுதிகளான கைலாசபட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 1040 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக பெய்துள்ள நிலையில் சோத்துப்பாறையில் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் மூலம் கண்மாய்கள் மற்றும் குளங்கள் முழுமையாக நீர் நிறைக்கப்படாத நிலையில் தமிழக அரசு அணையில் இருந்து பாசனத்திற்கு முறைப்படி நீர் திறக்க அரசாணை வெளியிடவில்லை.
இந்த நிலையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழக வெற்றி கழகத்தின் தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தலைமையில் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு சோத்துப்பாறை அணையில் இருந்து நீரை திறந்து விட்டதாக மலர்தூவி புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் பரப்பி உள்ளனர்.
புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறப்பதாக விவசாயிகளுக்கும் விவசாய சங்கத்தினருக்கும் எந்தவித முன் அறிவிப்பும் விடப்படாத நிலையில் தவெக நிர்வாகிகள் நீர் திறந்து விட்டு வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசின் நீர் திறப்பு குறித்து அரசாணை பெறப்படாமலும், பெரியகுளம் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் உத்தரவு இல்லாமலும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பாசனத்திற்கு நீர் திறந்தது விட்டது குறித்து பெரியகுளம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசனிடம் கேட்டபோது சோத்துப்பாறை அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை கண்மாய் பாசன விவசாயிகள், புதிய ஆயகட்டு விவசாயிகள் என யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், ஆனால் அனையில் இருந்து வெளியேறும் உபரி நீர் நாளையே நின்று விட்டால் இதுபோன்று எடுக்கப்படும் நீரும் நின்றுவிடும்.
இந்த நிலையில் தவெக கட்சி நிர்வாகிகள் நீரை திறந்து விட்டுள்ளது முறைப்படியான பாசனத்திற்கான நீர் திறப்பு இல்லை எனவும், தமிழக அரசிடம் அரசாணை பெற்ற பின் விவசாயிகளுக்கும், விவசாய சங்கத்தினருக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்ட பின்பு பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அணையில் இருந்து நீர்திறக்கும் போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம். ஆனால் அதுபோன்று எந்த அறிவிப்பும் இல்லாமல் ரீல்ஸ் போடுவதற்காகவே தமிழக வெற்றி கழகத்தினர் இவ்வாறு செய்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக பாஜக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த செயலுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் தமிழகத்துக்கு நீர் தர மறுக்கும் நிலையில் அண்டை மாநிலங்களுக்கு சென்று இதுபோன்று தண்ணீரை திறந்து விடுங்கள் என கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications
