ஓட்டு போடாதீங்க.. திருமாவை சீண்டிய ’வணக்கம்டா மாப்ள’ தேனி அருண்! நேரில் சென்று மிரட்டிய விசிகவினர்
தேனி: விசிக தலைவர் திருமாவளவன் குறித்து வீடியோ வெளியிட்ட "வணக்கம்டா மாப்ள" புகழ் தேனி அருணை விசிகவினர் நேரில் சென்று மிரட்டியதாக பரபரப்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் பழனி முருகன் கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தரிசனம் செய்தார். அவருடன் விசிக நிர்வாகிகளும் வந்திருந்த நிலையில், விஸ்வரூப தரிசனத்தில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்" தமிழ் கடவுள் முருகன் என்றும், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர் போகர் தான் வாழ்ந்ததற்கு அடையாளமாக நவபாஷாணத்தால் ஆன முருகர் சிலையை மலை மீது உருவாக்கி வைத்துள்ளார்.
புலிப்பாணி சித்தர் மற்றும் அவரது வாரிசுகள் இங்கு வாழ்ந்து மறைந்ததற்கான ஜீவசமாதிகள் உள்ளன அவற்றையும் சென்று தரிசனம் செய்தேன். எனக்கு எந்த நேர்த்திக்கடனும் கிடையாது. மொட்டை போடுவதற்காகவும் பழனிக்கு நான் வரவில்லை, தேர்தலில் நிறைய இடங்களை வாங்கித்தா முருகா என கேட்கவும் நான் வரவில்லை, அமைச்சர் பதவி அல்லது துணை முதலமைச்சர் பதவி, முதலமைச்சர் பதவி கேட்டும் முருகனை தரிசனம் செய்ய வரவில்லை.

எனது முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அதை பார்க்க வந்தேன் என தெரிவித்தார். 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த போகர், பழனி மலை மீது இப்போது இருப்பது போல ரோப் கார், வின்ச் போன்ற எந்த வசதியும் இல்லாமல் இருந்த காலத்தில் எப்படி படிகளை அமைத்தார்? எப்படி நவபாசான சிலையை செய்து கோவிலை கட்டினார் என்பதை காண்பதற்காக வந்தேன்" என கூறியிருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் டிக் டாக் பிரபலமான தேனி அருண். 'வணக்கம் டா மாப்ள தேனியில் இருந்து' என்றே பேசி பிரபலமான அவர் திருமாவளவனின் பேச்சு குறித்து விமர்சித்து இருந்தார். அதாவது, "பழனி மலை கோவிலுக்கு சென்றால் நான் வேண்டுதலுக்காக வரவில்லை சிலையை பார்க்க வந்தேன்.. விநாயகர் சிலை இப்படி இருக்கிறது.. முருகன் சிலை அப்படி இருக்கிறது என பேசுகிறீர்கள். சர்ச்சுக்கு சென்றால் ஏன் சுவற்றைப் பார்த்து பேசுகிறீர்கள் என கேட்பீர்களா?
உண்மையிலேயே உங்களுக்கு தைரியம் இருந்தால்.. ஓட்டு கேட்க போகும் போது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டும் எனக்கு ஓட்டு போடுங்கள்.. சாமி கும்பிடுபவர்கள் எனக்கு ஓட்டு போட வேண்டாம் என பேசிவீர்களா? " என கேட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதாக, 'வணக்கம் டா மாப்ள' தேனி அருணை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் மிரட்டியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தற்போது சபரிமலைக்கு அருண் மாலை அணிந்திருக்கும் நிலையில் அவர் வேலை பார்க்கும் இடத்திற்குச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி துண்டை அணிந்த சிலர் ஆபாசமாக பேசியதாகவும், அவரை தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வர நிலையில் தன்னை தாக்கியதாக அருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையில் அவர் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications