2026ல் யாருடன் கூட்டணி? விஜய் உடன் சேர சான்ஸ் இருக்கா? ஆஹா எடப்பாடி சொல்வதை நோட் பண்ணுங்க
தேனி: அதிமுக சார்பில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். குறிப்பாக பாஜகவுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சுவதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு செய்யவில்லை என்றும் அவர் சாடினார். மேலும், கூட்டணி தொடர்பாகவும் அவர் மறைமுகமாக ஒரு முக்கிய கருத்தைக் குறிப்பிட்டார். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா தேனியில் நடைபெற்றது.. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

எடப்பாடி பழனிசாமி
தொடர்ந்து பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "இந்த பொதுக்கூட்டம்.. மாநாடு போல் காட்சியளிக்கிறது. இதைப் பார்த்தாலே பலருக்கும் எரிச்சல் ஏற்படும். இது தெய்வீக மண்.. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரு பெரும் தெய்வங்கள் வென்ற மண் இது.. இவ்வளவு சிறப்புப் பெற்ற தேனியில் பேசுவது மகிழ்ச்சியைத் தருகிறது. எங்குப் போனாலும் 10 ஆண்டுக் கால அதிமுக ஆட்சி தமிழகத்திற்கு இருண்ட காலம் எனவும் தமிழகத்திற்கு வளர்ச்சி கிடைக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.
ஆனால், இந்த தேனி மாவட்டத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.. அதிமுக ஆட்சியில் தான் சட்டக்கல்லூரி, கால்நடை மருத்துவக்கல்லூரி என ஏகப்பட்ட திட்டங்கள் கொண்டு வந்தோம். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் தேனி மாவட்டத்திற்கு திமுக அரசு எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை..
முல்லை பெரியாறு நீர்மட்டம்
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கூட அதிமுக ஆட்சியில் தான் 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தப்பட்டது. முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுக ஆட்சியில் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக நிச்சயம் உயர்த்துவோம்.. காவிரி - குண்டாறு திட்டம் கூட அதிமுக ஆட்சியில் தான் செயல்படுத்தப்பட்டது.
ஸ்டாலின் அரசு
இப்போது தமிழ்நாட்டில் இருப்பது திராவிட மாடல் அரசு இல்லை... ஸ்டாலின் மாடல் அரசு தான் நடக்கிறது. இங்கே மாநிலத்தில் போதைக் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கஞ்சாவுக்கு பலரும் அடிமையாகிவிட்டனர். மாநிலம் முழுக்க கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். யாருக்கும் இங்குப் பாதுகாப்பு இல்லை.. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளைக் கூடப் பெற்றோர்கள் அச்சத்துடனேயே அனுப்புகிறார்கள். சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் போது இந்த அப்பா ஸ்டாலின் எங்கே போனார்.
போலீஸ் உயர் அதிகாரிகளாக உள்ள பெண் அதிகாரிக்குக் கூட இப்போது பாதுகாப்பு இல்லை. இங்கு ஏதோ பொம்மை முதலமைச்சர் ஆட்சி ஆட்சி செய்வது போல ஆட்சி நடந்து வருகிறது. திமுக மாவட்டச் செயலாளர்கள் அரசு அதிகாரிகளையே கூட மிரட்டுகிறார்கள். ஆனால், இவை அனைத்தும் சீக்கிரம் முடிவுக்கு வரும். மேலும், இன்னும் 2, 3 நாட்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்.
தமிழக அரசின் கடன்
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சைக்கிள் கூட கொடுக்க முடியாத நிலையில் தமிழகம் இருக்கும்போது, கார் பந்தயம் எல்லாம் தேவை தானா? முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக எழுதாத பேனாவுக்கு 80 கோடி ரூபாய் செலவிடப் போகிறார்களாம்.. கடந்த 73 ஆண்டுகளில் தமிழக அரசின் மொத்த கடன் 5,18,000 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது.
ஆனால், இவர்கள் கடந்த 3.5 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசு 3,57 லட்சம் கோடி ரூபாய்க் கடன் வாங்கியுள்ளதாம்.. அடுத்த 1.5 ஆண்டுகளில் மேலும் ஒன்றரை லட்சம் கோடி கடன் வாங்கி 5 ஆண்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க் கடன் வாங்கி விடுவார்கள். இது எல்லாம் மக்கள் தலையில் தான் விழும்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களுக்கு நாமம் போட்டுள்ளனர். மின் கட்டணத்தையும் கூட பல மடங்கு உயர்த்தியவர்களே தானே இவர்கள். இப்படியிருக்கும் தேர்தல் வாக்குறுதியில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாகப் பச்சையாக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார்.
நீட் விவகாரம்
காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது 10 ஆண்டுகள் மத்தியிலும் இவர்கள் தான் இருந்தார்கள். ஆனால், தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களை இவர்கள் கேட்டுப் பெறவில்லை. நீட் ரத்து செய்வோம் என்றார்கள், இப்போது அதற்கும் பதில் அளிக்கவில்லை. ஆனால், நீட்டில் அரசு மாணவர்கள் பலன் பெறும் வகையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுக சாதனை
இருமொழி கொள்கை தான் அதிமுக நிலைப்பாடு. அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.. நாங்கள் பாஜகவைப் பார்த்து நடுங்குபவர்கள் இல்லை.. எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பிரதமருக்கு கருப்பு பலூன் பறக்கவிட்ட ஸ்டாலின் இப்போது வெள்ளை குடையுடன் வரவேற்கிறார். அவர் பாஜகவைப் பார்த்துப் பயப்படுகிறார். இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின்.
கூட்டணி கணக்கு
எங்களுக்கு திமுக தான் எதிரி.. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது மட்டுமே எங்கள் இலக்கு.. எங்களுக்கு வேறு எந்த கட்சியும் எதிரிகள் இல்லை" என்று பேசினார். அதாவது திமுகவை அகற்றுவதே தங்கள் இலக்கு என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்தவொரு கட்சியும் தங்களுக்கு எதிரி கட்சி இல்லை என அவர் கூறியுள்ள நிலையில், விஜய் உடன் கூட்டணி கதவுகளை அவர் திறந்தே வைத்திருப்பது தெரிகிறது.












Click it and Unblock the Notifications