2 முறை எம்எல்ஏவா இருந்தாச்சி.. இனி தம்பிக்கு விட்டு கொடு! திமுக வேட்பாளரிடம் கெஞ்சும் அதிமுக வேட்பாளர்!
தேனி: ''அதான் 2 முறை எம்எல்ஏவா இருந்துட்டல்ல.. மீண்டும் ஜெயித்தால் 3வது முறை எம்எல்ஏ தான் ஆகப்போகிற. தம்பி மீது பாசம் இருந்தால் இப்போது விட்டுக்கொடு'' என்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகிராஜன் தனது அண்ணனான திமுக வேட்பாளர் மகாராஜனிடம் கெஞ்சுவது போல் மக்கள் மத்தியில் பேசியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபறக்கிறது. வேட்பாளர்கள், கட்சியின் தலைவர்கள் அனைவரும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் தனிக்கவனம் பெறும்.

இதற்கு காரணம் அந்த தொகுதியில் அண்ணன் - தம்பி நேரடியாக போட்டி போடுவது தான். அதாவது திமுக சார்பில் மகாராஜன் என்பவரும், அதிமுக சார்பில் லோகிராஜன் என்பவரும் 3வது முறையாக போட்டியிடுகின்றனர். இதில் 2 சட்டசபை தேர்தல்களிலும் திமுக சார்பில் களமிறங்கிய மகாராஜன் தான் வெற்றி பெற்றார். 2 முறையும் தம்பி லோகிராஜன் தோற்றுப்போனார்.
3வது முறை அண்ணன் - தம்பி மோதல்
தற்போது 3வது முறையாக இருவரும் தொகுதியில் மல்லுக்கட்டி உள்ளனர். திமுக வேட்பாளராக சிட்டிங் எம்எல்ஏ மகாராஜன் களம் இறங்கி உள்ளார். அதிமுக வேட்பாளராக லோகிராஜன் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் இன்று லோகிராஜன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது:
2 முறை ஜெயிட்டாரு
''நீங்கள் எல்லாம் என் சொந்த பந்தத்துக்கு ஆளுங்க.. உங்களுக்கு எல்லாம் எங்க குடும்பத்தை பற்றி நன்கு தெரியும். 2 முறை அவர் (அண்ணன் மகாராஜன்) ஜெயிச்சிட்டாருல.. முதலில் என் பெயர் தானே வேட்பாளராக வந்தது. அப்போது அவர் விட்டு கொடுத்து இருக்கலாம்ல. அப்பா இருந்த காலத்திலேயே நாங்க ஆண்டிப்பட்டிக்கு வந்தோம். நான் அவர், எல்லாம் ஒரே வீட்டில் தான் இருந்தோம். அதன்பிறகு அவருக்கு விட்டு கொடுத்து நான் வெளியே போனேன்.
தம்பிக்கு விட்டு கொடுக்கணும்லே
இப்படியெல்லாம் விட்டுக்கொடுத்த தம்பிக்கு விட்டு கொடுக்கமாட்டிக்கிறாரு. அவரு 2 முறை எம்எல்ஏவாக இருந்துட்டாரு.. மீண்டும் ஜெயித்தால் 3வது முறை எம்எல்ஏ தான ஆகப்போறான். தம்பிக்குள்ள பாசம் இல்லைல. 2 முறை ஜெயிச்சிட்டாருல்லா.. அப்போ தம்பிக்கு விட்டு கொடுக்கணும்லே. வீட்டுக்கு அவர் மூத்தவர். மறுபடியும் ஜெயித்தால் 3வது முறை எம்எல்ஏ தான ஆகப்போறாரு.
இந்த முறை பாரு..
சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறையும். ஆனால் இரட்டை இலை என்றைக்கும் மறையாது. இந்த முறை பாரு.. 50,000 ஓட்டு வித்தியாசத்தில் சொந்த பந்தங்கள் வாக்குகளுடன் வெற்றி பெற்று.. ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு செய்றான். சொந்த பந்தம் எல்லாம் கேட்குறாங்க..
யாருக்குப்பா ஓட்டு போடுறதுனு? அதான் 2 முறை ஓட்டு போட்டுட்டீங்களே.. இந்த முறை அவருக்கு போடாமல் இருந்தால் சரி. இந்த தடவை நம்ம ஜாதி உள்பட அனைத்து ஜாதி மக்களும் எனக்கு ஓட்டுப்போட்டு கோட்டைக்கு அனுப்புங்க.. உங்களுக்காக பணி செய்வேனு உறுதி கொடுக்கிறேன்'' என்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆண்டிபட்டி தொகுதி நிலவரம்
அண்ணன் - தம்பியான திமுகவின் மகாராஜன் - அதிமுகவின் லோகிராஜன் இடையே கடந்த 2019 சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து போட்டி தொடங்கியது. 2019ல் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி இடைத்தேரதலில் திமுகவின் மகாராஜன் 87,079 வாக்குகள் பெற்றார். அதிமுகவின் லோகிராஜன் 74,756 ஓட்டுகள் வாங்கினார். இதனால் மகாராஜன் 12,323 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று எம்எல்ஏவானார்.
அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் இருவரும் மோதினர். அப்போது திமுகவின் மகாராஜன் 93,541 வாக்குகள் வாங்கினார். அதிமுகவின் லோகிராஜன் 85,003 வாக்குகள் வாங்கினார். இதனால் 8,538 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் மகாராஜன் வெற்றி பெற்றார். இப்போது 3வது முறையாக இருவரும் மோதுகின்றனர். இதனால் யார் வெல்வார்கள்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications