அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்
நெல்லை: த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார். அதேநேரம் கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததற்காக பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விசாரணையை சபாநாயகர் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னாள் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க 13.05.2026 பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை கட்சி கொறடா உத்தரவையும் மீறி ஆதரித்து வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏ-க்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமு கழக பொதுச்செயலாளர் அவர்கள் மாண்புமிகு சபாநாயகர் அவர்களிடம் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள 25 சட்டமன்ற உறுப்பினர்களில் 21 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொடுத்த மன்னிப்பை ஏற்று தகுதி நீக்கத்தை ரத்து செய்ததாக மாண்புமிகு பேரவை தலைவர் அறிவித்துள்ளார்கள். அதே புகார் மனுவில் கூறப்பட்ட மீதி 4 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் உட்பட 22 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரு வேலுமணி அவர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தற்போது அதிமுக கொறடா திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ அவர்களா? அல்லது திரு விஜயபாஸ்கர் எம்எல்ஏ அவர்களா?
அறிவிப்பு சரியா, அறிவிக்கையாக, notification-ஆக வெளியிடப்பட வேண்டாமா? திரு. எடப்பாடி condon மட்டுமே செய்துள்ளார். தகுதிநீக்க மனுவை திரும்பபெறவில்லை." இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகரின் நடவடிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்த மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர், "சபாநாயகரின் இந்த அறிக்கையின்படி, ஏற்கனவே சட்டமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்த நான்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நான்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, காலியிடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.
தற்போது, அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும்போதே இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த முடியுமா? அல்லது இது இடைத்தேர்தலைத் தாமதப்படுத்தும் ஒரு தந்திரமா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.












Click it and Unblock the Notifications