நயினார் கோட்டையில்.. அண்ணாமலை பெயர் சொன்னதும் எழுந்த ஆரவாரம்.. அமித்ஷா முன் நடந்த சம்பவம்!
நெல்லை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் கோட்டையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலையின் பெயரை சொன்ன போது, மிகப்பெரிய ஆரவாரம் எழுந்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
நெல்லையில் தமிழக பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்து வரும் இந்த பூத் கமிட்டி மாநாட்டில், 5 நாடாளுமன்ற தொகுதிகள் அடங்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆபரேஷன் தென் மாவட்டம் என்று பாஜக மேற்கொண்டு வரும் திட்டத்திற்கு இந்த பூத் கமிட்டி மாநாடு மிகமுக்கியமான நகர்வாக அமைந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை, நெல்லை, தேனி உள்ளிட்ட 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக 2வது இடத்தை பிடித்தது. இதன் காரணமாக சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் பார்வை தென் மாவட்டங்களை நோக்கி திரும்பி இருக்கிறது.
அதற்கேற்ப தென் மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தமிழக பாஜகவின் தலைவராக கொண்டு வரப்பட்டார். அதன்பின் தென் மாவட்டங்களில் பூத் கமிட்டி பணிகளை விரைவுபடுத்தினார். இந்த நிலையில் நெல்லையில் நயினார் நாகேந்திரனின் சொந்த தொகுதியில் பூத் கமிட்டி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நயினார் நாகேந்திரனின் சொந்த தொகுதியில் நடக்கும் மாநாடு என்பதால், அமித்ஷா முன் தனது ஆதரவை நிரூபித்து காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நெல்லையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், நயினார் நாகேந்திரனை வரவேற்றார். அப்போது கூட்டத்தில் சிறிய அளவில் ஆரவாரம் எழுந்தது.
இதன்பின் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையை அமித்ஷா வரவேற்றார். அப்போது கூட்டத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் ஆரவாரம் எழுந்தது. இதன் மூலமாக நயினார் நாகேந்திரன் கோட்டையிலும் அண்ணாமலைக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மதுரையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலையின் பெயரை சொன்ன போது, மிகப்பெரிய ஆரவாரம் எழுந்தது.
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் வந்த போது, அண்ணாமலைக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு கொண்டே வந்தது. டெல்லி மேலிடத்தில் அண்ணாமலைக்கு செல்வாக்கு இருந்தாலும், தமிழக பாஜக நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது அமித்ஷா முன்னிலையில் அண்ணாமலை பெயருக்கு ஆரவாரம் எழுந்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications