அணில் குமார்.. ஊழலை மறைக்க மத்திய அரசை குறை சொல்றாரு.. அமைச்சரை கிண்டல் செய்த விபி துரைசாமி!
நெல்லை : மின்சாரத்துறையை ஒழுங்காக நடத்தத் தெரியாத அணில் குமார் என்ற செந்தில் பாலாஜி, அவர் செய்த ஊழலை மறைப்பதற்கு, மத்திய பாஜக அரசை குறை சொல்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் விபி துரைசாமி சாடியுள்ளார்.
Recommended Video
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரது நினைவு தினத்தை ஒட்டி பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்த விபி.துரைசாமி, "பாகுபாடு இல்லாமல் அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் பாஜக அஞ்சலி செலுத்தி வருகிறது. விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் ஒண்டிவீரனுக்கு இன்று தபால் தலை வெளியிட்டு, அவரது புகழுக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், போதைப் பொருளைத் தடுக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. டிஜிபி நல்ல மனிதர். ஆனால் நல்ல டிஜிபி கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொய் சொல்கிறார்
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, "தமிழகத்தில் சொத்து வரி, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துமே மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு உயர்த்த சொன்னதால்தான் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழக அரசு வாங்கிய கடனை செலுத்த வேண்டும் என்று தான் மத்திய அரசு தெரிவித்தது.

மத்திய அரசு மீது குறை சொல்வதா?
அதை மறைத்துவிட்டு இதுபோன்ற பொய்யான தகவல்களை அமைச்சர் கூறி வருகிறார். இதேபோல விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் நிறுத்தப்பட்டு வருகிறது. அதற்கும் மத்திய அரசு மீது குறை சொல்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. குறை சொல்வதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அணில் குமார்
மின்சாரத்துறையை ஒழுங்காக நடத்தத் தெரியாத அணில் குமார் என்ற செந்தில் பாலாஜி, அவர் செய்த ஊழலை மறைப்பதற்கு, மத்திய பாஜக அரசை குறை சொல்கிறார். கடன் வாங்கியதை ஏன் கட்டவில்லை என்று கேட்டால், மத்திய அரசு இலவசங்களை தடுப்பாகச் சொல்லி சமாளிக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு
மேலும், "தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. போதை பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதை எங்கள் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் நானும் ஒவ்வொரு கூட்டத்திலும் பேசினோம். அதன் பிறகு தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், காவல்துறை அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார்.

டிஜிபி நல்ல மனிதர்
இருந்தபோதிலும் போதைப் பொருளைத் தடுக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் டிஜிபி கூறும்போது வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இங்கு வருவதாக தெரிவிக்கிறார். தேனி மாவட்டத்திலேயே விவசாயம் நடக்கிறது. டிஜிபி நல்ல மனிதர். ஆனால் நல்ல டிஜிபி கிடையாது." எனத் தெரிவித்தார்.

திமுக உடன் கூட்டணி?
தொடர்ந்து திமுகவுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நாங்கள் தமிழகத்தில் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறோம். அதனை வெளிப்படையாகச் சொல்ல முடியாது" என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications