பசுபதி பாண்டியன் ஆதரவாளர் வெட்டிக் கொலை..முகத்தையே குறிவைத்த கும்பல்! குலைநடுங்க வைக்கும் சிசிடிவி
நெல்லை: நெல்லையில் பட்டப்பகலில் காதலி கண் முன்பே காதலனை அரிவாளால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடிய நிலையில், அதன் சிசிடிவி கட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகத்தை குறி வைத்து கொலையாளிகள் வெட்டியுள்ள நிலையில், ஜாதி மோதலால் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா(30). இவர் இன்று தனது காதலியுடன் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகரில் உள்ள பிரபல ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் ஹோட்டல் வாசலில் வைத்து தீபக் ராஜாவை, அவரது காதலி கண் முன்பே கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். குறிப்பாக அவரது முகத்தை குறி வைத்து அந்த கும்பல் வெட்டியது குறிப்பிடத்தக்கது.
ரவுடி வெட்டிக் கொலை: இந்த தாக்குதலால் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது கண்முன்னே காதலனை வெட்டி கொலை செய்ததைக் கண்டு தீபக் ராஜாவின் காதலி கதறி அழுதார். இதனால் அந்த இடமே பரபரப்புக்குள்ளானது. மேலும் கொலையை கண்டு பலர் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், சிலர் அங்கிருந்து ஓடினர். கொலையை கண்ட பொதுமக்கள் இது குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

நெல்லையில் பரபரப்பு: தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து பாளையங்கோட்டை போலீசார் மற்றும் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் தீபக் ராஜா மீது ஏற்கனவே கொலை உள்பட சில வழக்குகள் நிலவில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜாதி ரீதியாக நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
சாதி மோதல் காரணமா?: அதாவது தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஜாதி பின்னணியோடு அடிக்கடி மோதி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ல் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் நெல்லை மாவட்டம் தாழையூத்தில் நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கிலும் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தீபக்ராஜா கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகள்: எனவே ஜாதி மோதல் காரணமாகவே தீபக் ராஜா கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சம்பவம் நடைபெற்ற ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். நெல்லையில் ஆள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் சாலையில் பட்ட பகலில் காதலி கண் முன்னே காதலன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

பலத்த பாதுகாப்பு: இதற்கிடையே தீபக் ராஜாவின் மரண செய்தியை கேட்டு மருத்துவமனை முன்பு அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் திரள தொடங்கினர். இதன் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே தீபக் ராஜா மீது கொலை வழக்குகள் இருக்கும் நிலையில் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக? எனவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் தீபக் ராஜாவுக்கு அரசியல் பின்புலமும் இருப்பதால் அவரது ஆதரவாளர்கள் பிரச்சனை செய்ய வாய்ப்புள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications