10 விஜய், 100 அண்ணாமலை வந்தாலும் அடி உறுதி – இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் பன்ச்
கள்ளக்குறிச்சி: திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக - பாஜக, தவெக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் உள்ளன. திமுகவை வீழ்த்த அவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், 10 எடப்பாடி பழனிசாமி வந்தாலும், 10 விஜய் வந்தாலும், 100 அண்ணாமலை வந்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது. அவர்கள் தமிழ்நாட்டில் அடி வாங்குவார்கள் என்று கூறியுள்ளார்.
இன்னும் சில மாதங்களில், 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது.அரசியல் களம் இப்போதிருந்தே அனல் பறக்க தொடங்கிட்டது. திமுக கூட்டணி கடந்த சில தேர்தல்களை போலவே, வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தொடர்கிறார்கள். எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க அவர்கள் முனைப்பு காட்டுகிறார்கள். அவர்களுக்கு எதிராக அதிமுக - பாஜக கூட்டணி, தவெக, நாம் தமிழர் ஆகியோர் களமாடி வருகிறார்கள்.

இன்னும் 4 கட்சிகள் வந்தாலும்
முக்கியமாக அதிமுக - பாஜக கூட்டணி திமுகவுக்கு எதிராக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்கள். எப்படியாவது தவெவை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக அதிமுக, பாஜக தரப்பில் விஜய்யிடம் பேச்சு வார்த்தையும் நடப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எங்கள் நிலை மிகவும் தெளிவு. திமுகவை உறுதியாக நம்புகிறோம். அதிமுக - தவெக போல இன்னும் 4 கட்சிகளை சேர்த்து அழைத்து வந்தாலும், அந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் முறியடிக்கப்படும். அந்தக் கூட்டணி தோல்வியை சந்திக்கும்,
10 எடப்பாடி பழனிசாமி வந்தாலும்
ஏனென்றால் தமிழகம் தான் இந்தியாவிலேயே.. ஏன் உலகிலேயே கூட்டிசைவு பூமி. இது ஒற்றுமையை விரும்பும் மண். பிளவுவாதத்தை எப்போதும் ஏற்க மாட்டார்கள். மனிதர்களிடையே பிளவு ஏற்படுவதை தமிழ் மக்கள் விரும்ப மாட்டார்கள். இதன் பண்பாடே அப்படித்தான். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே யாதும் ஊரே.. யாவரும் கேளீர், என்றும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வேறுள குழுவையெலாம் மானுடம் வென்றதம்மா. என்கிற சொல் பிறந்த பூமி இது.
இந்த மக்கள் எப்போதும் ஒற்றுமையை விரும்புவார்கள். பிரித்தாளும் சிதைக்கிற கருத்துகளை இது நிராகரிக்கும் பூமி. அதை வைத்துத்தான் சொல்கிறேன் சகோதரர் எடப்பாடி பழனிசாமி போன்று இன்னும் 10 எடப்பாடிகள் வந்தாலும் சரி, சகோதரர் விஜய்யை போன்று இன்னும் 10 விஜய்கள் வந்தாலும் சரி, சகோதரர் அண்ணாமலை போன்று 100 அண்ணாமலைகள் வந்தாலும் சரி இந்த தமிழ் மண்ணில் அவர்களுக்கு சரியான அடி காத்திருக்கிறது.
திமுக கூட்டணி
அவர்கள் கூட்டணியை தோற்கடித்து, திமுக கூட்டணி வெற்றி பெறுவோம். ஊர் பெயரில் சாதியை நீக்கும் முடிவு மிகவும் நல்லது. தந்தை பெரியார் அதற்காகத்தான் பாடுபட்டார். டாக்டர் அம்பேத்கர் அதற்காகத்தான் பாடுபட்டார். இடதுசாரிகள் அதற்கு தான் பாடுபடுகிறோம். ஏன் காந்தி கூட தீண்டாமைக்கு எதிராகத்தான் பாடுபட்டார். முற்போக்கு எண்ணம் கொண்ட பலரும் அதற்கு எதிராக போராடினார்கள். அது நல்லது.
ஊர்களில் உள்ள சாதி பெயருடன், மனித உள்ளங்களில் உள்ள சாதியும் நீங்க வேண்டும் என்று போராடி வருகிறோம். சூழலுக்கு ஏற்ற வகையில் திமுகவில் சீட்களை பெறுவோம். சேலத்தில் 60,000 - 70,000 பேர் திரண்டார்கள். எங்களுக்கு பணம் இல்லையென்றாலும் அமைப்பு இருக்கிறது. அதனால் சூழலை பொறுத்து ஓரிரு இடங்கள் அதிகமாக கேட்பதில் எந்தத் தவறும் இல்லை என்றே நினைக்கிறேன்." என்று கூறினார்.












Click it and Unblock the Notifications