வள்ளியூரில் ஸ்டாலினை வரவேற்க நடப்பட்ட திமுக கொடி கம்பங்கள்! சாலையில் கிடந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம்
நெல்லை: கன்னியாகுமரி சென்ற முதல்வர் ஸ்டாலினை வரவேற்க குமரி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வழி நெடுக திமுகவினர் கட்சிக் கொடிக்கம்பங்களை நட்டு வைத்து இருந்தனர். வள்ளியூரில் இந்த கொடிக்கம்பங்கள் காற்றில் சாலையில் சாய்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் கொடிக்கம்பங்கள் வரிசையாக கிடந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த திமுகவினர் சாலையில் கிடந்த திமுக கொடிக்கம்பங்களை அகற்றினர்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மெற்கொண்டுள்ளார். தூத்துக்குடியில் மினி டைடல் பூங்காவை நேற்று முன் தினம் திறந்து வைத்தார். அதன்பிறகு புதுமைப்பெண் திட்டத்தை விரிவாக்கம், அதாவது அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் திட்டத்தினை நேற்று தொடங்கி வைத்தார்.

இதையடுத்து தனது தூத்துக்குடி பயணத்தை நிறைவு செய்து கன்னியாகுமரிக்கு நேற்று சென்றார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 வது ஆண்டு ஆனதையொட்டி, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதையொட்டி, இந்தியாவிலேயே முதன் முறையாக திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கடல் நடுவே 37 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கண்ணாடி இழை பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
வழி நெடுகிலும் திமுக கொடிக்கம்பங்கள்
இதனைத்தொடர்ந்து நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் பங்கேற்றார். இரண்டாவது நாளாக இன்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 2ம் நாள் நிகழ்ச்சிகளாக இன்று காலை 9.30 மணிக்கு திருவள்ளுவர் வெள்ளிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரையும் முதல்வர் வெளியிட்டார்.
கன்னியாகுமரி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது அவரை வரவேற்பதற்காக பல்வேறு இடங்களிலும் பேனர்களையும், கொடிக்கம்பங்களையும் திமுகவினர் வைத்துள்ளனர். குறிப்பாக கன்னியாகுமரி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையிலும் நடுவில் உள்ள தடுப்பு பகுதியில் கொடிக்கம்பங்களை நட்டு வைத்துள்ளனர்.
நடு ரோட்டில் கிடந்த கொடிக் கம்பங்கள்
வள்ளியூர் பகுதியில் காற்று எப்போதுமே சற்று அதிகமாக வீசும் என்ற நிலையில், இன்று திடீரென காற்றுடன் கனமழையும் பெய்தது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் வரிசையாக நடப்பட்டு இருந்த கொடிக்கம்பங்கள் பலவும் சாலைகளில் விழுந்து கிடந்தன. தேசிய நெடுஞ்சாலையின் செண்டர் மீடியனில் வைக்கப்பட்ட கொடிக்கம்பங்கள் வாகனங்கள் செல்லும் சாலையில் விழுந்து கிடந்தன.

வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடு ரோட்டில் ஹைவேயில் கொடிக்கம்பங்கள் கிடந்ததை பார்த்து வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே, கொடிக்கம்பங்கள் சாலையில் விழுந்து கிடக்கும் தகவலை அறிந்த திமுகவினர் அப்பகுதிக்கு வந்து கொடிக்கம்பங்களை அப்புறப்படுத்தினர்.
வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கும் போது எதிர்க்கட்சியினர் என்றால் உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுப்பதாகவும் அதே நேரத்தில் ஆளும் கட்சியினர் விதி மீறலில் ஈடுபட்டால் கண்டு கொள்வது இல்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.
அதிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் இப்படி திமுக கொடிக்கம்பங்களை நட்டு வைப்பதால் விபத்து ஏற்பட்டு சேதம் எற்படும் அபாயம் உள்ளதால், உடனடியாக விதி மீறல் இருந்தால், போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி வாகன ஓட்டிகள் வலியுறுத்தியதை பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications