ஜமீன் குதிரை ருசித்த சொக்கம்பட்டி அல்வா! நெல்லை இருட்டுக்கடை ஆனது எப்படி? 85 ஆண்டு கால வரலாறு!
நெல்லை: திருநெல்வேலிக்கு யார் போனாலும், "மறக்காம அல்வா வாங்கிட்டு வந்துடுங்க" என்ற குரல் கேட்காத இடமே இருக்காது! அந்த அளவுக்கு அந்த கடையின் அல்வா உலக புகழ் பெற்றது.
இந்த ருசிக்கு காரணம் தாமிரபரணி ஆற்று தண்ணீர் என சொல்லப்படுகிறது. எனினும் எத்தனை அல்வாக்களை சாப்பிட்டாலும் இருட்டுக் கடை அல்வா ஸ்பெஷல்தான்!

அப்படியே தொண்டைக்குள் நைசாக இறங்கும் போது! இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைத்தது என மனதிற்குள் பாடாதவர்களே இருக்க மாட்டார்கள். இருட்டுக் கடை அல்வா கடைக்கு எந்த நேரம் சென்றாலும் அல்வா கிடைக்குமா என்றால் அல்வா கிடைக்காது, ஆனால் "அல்வா" கிடைக்கும்.
அல்வா காலி
அதாவது குறிப்பிட்ட நேரத்திற்குள் அல்வா காலியாகிவிடும் என்பதால் எல்லா நேரத்திலும் கிடைக்காது. நெல்லையப்பரை தரிசித்துவிட்டு செல்வோர் இருட்டுக் கடைக்கு போய் கடை திறப்பதற்குள்ளாக வரிசையில் நின்று விடுவர். அப்போதுதான் அல்வா கிடைக்கும். கடை திறந்த ஒரு மணி நேரத்தில் மொத்தமும் விற்றுத் தீர்ந்து விடும். இவ்வாறு வாங்கும் அல்வா வெளிநாடுகளுக்கும் செல்லப்படுவதாக சொல்லப்படுகிறது.
இருட்டுக் கடை அல்வா வரலாறு
இந்த நிலையில் இருட்டுக் கடை அல்வாவின் வரலாறு குறித்து தெரிந்து கொள்வோம். தென்காசி- புளியங்குடி சாலையில் இருப்பது சொக்கம்பட்டி என்ற கிராமம். இது அந்த காலத்தில் ஜமீனாக இருந்தது. அந்த ஜமீனில் இருந்த குதிரைகளுக்கு தரமான உணவு சமைத்துக் கொடுக்க வடஇந்தியர்கள் வந்திருந்தனர்.
குதிரைக்கு அல்வா
அவர்களது கைவண்ணத்தால் குதிரைகள் கொழு கொழுவென வளர்ந்தன. அப்படி அந்த குதிரைக்கு என்ன உணவு அளித்தார்கள் என்பதுதானே உங்கள் சந்தேகம்? வேறெதுவும் இல்லை! சொக்கம்பட்டி அல்வாதான்!
சொக்கம்பட்டி ஜமீன்
காலங்கள் மாற மாற சொக்கம்பட்டி ஜமீன் அழிந்துவிட்டது. இதனால் அங்கு பணியாற்றிய வட இந்தியர்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து வேலைத் தேடி நெல்லைக்கு வந்தனர். இவ்வாறு வந்தவர்களில் ஒருவர் ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ணசிங் என்பவரின் மகன் பிஜிலி சிங்.
தாமிரபரணி ஆறு
இவர் குதிரைக்கு செய்து கொடுத்த அல்வாவில் மாற்றம் செய்து மக்களுக்கு தேவையான மாதிரி ஏன் செய்து கொடுக்கக் கூடாது என நினைத்தார். அதன்படி அவர் தாமிரபரணி ஆற்று தண்ணீரில் அல்வா தயாரித்து அதை மக்களுக்கு விற்பனை செய்தார்.
இருட்டுக் கடை
அவருடைய வீடு தேடி வந்து மக்கள் அல்வாவை வாங்கினர். சுவை தரமாக இருந்ததால் மக்கள் மீண்டும் மீண்டும் வாங்கி அல்வா தயாரிப்பது பெரிய அளவில் போனது. இதையடுத்துதான் ஒரு கடையை தொடங்கலாம் என நினைத்து பிஜிலி சிங்தான் இருட்டு கடை அல்வாவை தொடங்கினாராம்.
85 ஆண்டு பாரம்பரியம்
1940 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போதும் இந்த கடை 85 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இருட்டுக் கடை அல்வாவை எப்படி தயாரிக்கிறார்கள் என்றால் கோதுமையை இயந்திரத்தில் அரைக்காமல் கையாலேயே அரைக்கிறார்களாம். அத்துடன் தாமிரபரணி ஆற்று தண்ணீர் சேரும் போது அல்வாவிற்கு கூடுதல் சுவை கிடைப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அல்வாவை செய்யும் பாத்திரங்கள், அதை சேமிக்கும் பாத்திரங்கள் என எல்லாமே பாரம்பரிய முறையிலேயே தயாரிக்கப்படுகிறதாம்.
இருட்டில் குண்டு பல்பில்
வியாபாரம் களை கட்டுதே என்பதற்காக அண்டா அண்டாவாக அல்வா கிண்டுவதில்லை. ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவில் மட்டுமே தயாரிக்கிறார்களாம். இந்த கடை பெயருக்கேற்ப இருட்டான இடத்தில் ஒரு பல்பு வெளிச்சத்தில் இயங்கி வருகிறது. முன்பும் இருட்டான கடையில் 40 வாட்ஸ் பல்பு எரிந்து கொண்டிருந்ததாம். அதாவது மாலை 5.30 மணிக்கு மேல்தான் அல்வா கிடைக்கும் என்பதால் இந்த கடைக்கு இருட்டுக் கடை என்ற பெயர் வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இருட்டுக் கடை அல்வா குறித்து உங்களுக்கு தெரிந்த கூடுதல் தகவல்களை கமென்ட்டில் சொல்லுங்கள்!












Click it and Unblock the Notifications