ஆஹா.. "வார்த்தையை விட்ட" எடப்பாடி! "தாங்குறதே நாங்கதான்.." கேட்டதும் ஸ்டன்னான பாஜக
திருநெல்வேலி: அதிமுக தான் பல கட்சிகளுக்கு உதவியாக உள்ளது. அதிமுகவுக்கு தான் யாருமே உதவியாக இல்லை. பல கட்சிகளை அதிமுக தான் தாங்கி பிடித்து கொண்டு உதவிக்கரமாக இருந்து வருகிறது என எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலம் பாஜகவை மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தாக்கி பேசியுள்ளாரா? என்ற கேள்வி எழ தொடங்கி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவிடம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் ஆதரவு கேட்டிருந்தனர். ஆனால் பாஜக காலம் தாழ்த்தி வந்தது. இதற்கிடையே அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி இடையீட்டு மனு செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தான் தேர்வு செய்ய வேண்டும் என கூறியது. இதையடுத்து அதிமுக பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த தென்னரசு அங்கு களத்தில் உள்ளார். ஓ பன்னீர் செல்வம் தனது வேட்பாளரை திரும்ப பெறுவதாக அறிவித்த நிலையில் அவரது வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதிமுக-பாஜக பிரச்சனை
முன்னதாக ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியால் பாஜக, அதிமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. அதாவது பாஜக சார்பில் அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் அல்லது எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரில் யாருக்கும் ஆதரவு தெரிவிப்பது என்பது பிரச்சனை நீடித்தது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலான ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பேனர் இடம்பெற்றிருந்தது. பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயர் உள்ள நிலையில் கூடுதலாக முற்போக்கு என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு இருந்தது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டதாக என்ற கேள்விகள் எழுந்து பரபரப்பாக பேசப்பட்டன. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி என பெயர் மாற்றப்பட்டது. இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தங்களை ஆதரிக்க வேண்டும் என பாஜகவுக்கு அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

சுமூகமாக முடிந்த பிரச்சனை
இறுதியாக தற்போது ஈரோடு கிழக்கு பாஜக போட்டியிடாத நிலையில் ஓ பன்னீர் செல்வம் தரப்பும் களத்தில் இல்லை. இதனால் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் மட்டுமே போட்டியிடுகிறார். இதனால் அவருக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்க உள்ளது. இதையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளருக்கு பாஜக ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் பாஜக-அதிமுக கூட்டணி தொடர்பான குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருகட்சியினரும் தற்போது சுமூகமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமியின் இன்றைய பேச்சு பாஜகவை திரும்பி பார்க்க செய்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
தென்காசி எம்எல்ஏவாக இருந்தவர் கருப்பசாமி பாண்டியன். இவர் தற்போது அதிமுகவில் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி அணியில் கருப்பசாமி பாண்டியன் தற்போது உள்ளார். இந்நிலையில் தான் கருப்பசாமி பாண்டியனின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க இன்று திருநெல்வேலிக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். விழாவில் பங்கேற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அதிமுக தான் பல கட்சிகளுக்கு உதவுகிறது
இந்த வேளையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக பற்றியும், இரு கட்சிகளுக்கு இடையேயும் மோதல் போக்கு இருப்பதாக கூறப்படுவது பற்றியும் விளக்கம் அளித்தார். இதுபற்றி எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: அதிமுக தான் பல கட்சிகளுக்கு உதவியாக உள்ளது. அதிமுகவுக்கு தான் யாருமே உதவியாக இல்லை. பல கட்சிகளை அதிமுக தான் தாங்கி பிடித்து கொண்டு உதவிக்கரமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு கட்சி தலைவர்களும் கட்சியை வளர்க்க தான் பார்ப்பார்கள். பாஜக எங்களுடன் தான் கூட்டணியில் உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் இருக்கின்றன. இப்போது பாஜக உடனான கூட்டணி தொடரும்.

ஈரோடு கிழக்கில் வெற்றி
திமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் தேய்ந்து வருகின்றன. திமுக மட்டுமே வளர்ந்து வருகிறது. திமுக கூட்டணி கட்சியினர் அவர்களுக்கு அடிமைசாசனம் எழுதி கொடுத்துள்ளார். இந்த கட்சிகள் அனைத்தும் விரைவில் காணாமல் போய்விடும். ஏனென்றால் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் எந்த வித கருத்தும் தெரிவிக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிறது. இருப்பினும் மக்களுக்கு எந்த திட்டத்தையும் அந்த அரசு செய்யவில்லை. இதனால் மக்கள் கொந்தளிப்புடன் இருக்கின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு டிநீர் கொடுக்காத அரசாக தான் திமுக உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். இந்த வெற்றி வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்'' என்றார்.

கவனத்தை பெற்ற வார்த்தைகள்
இந்நிலையில் தான் ‛‛பல கட்சிகளை அதிமுக தான் தாங்கி பிடித்து கொண்டு உதவிக்கரமாக இருந்து வருகிறது'' என்ற வார்த்தை அனைவராலும் கவனிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் பாஜகவை மனதில் வைத்து எடப்பாடி பழனிச்சாமி சொல்லி இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் நினைக்கின்றனர். இருப்பினும் கூட அடுத்த வரியாக, ‛‛பாஜக அதிமுக கூட்டணியில் தான் உள்ளது'' என எடப்பாடி பழனிச்சாமி கூறியதை புறம்தள்ளிவிட முடியாது. இதன்மூலம் இப்போது இரு அணியினரும் ஒன்றாக உள்ளதை எடப்பாடி பழனிச்சாமியே ஒப்புக்கொண்டுள்ளார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications