மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மாணவர்களிடம் இரு கைகளை கூப்பி மன்னிப்பு கேட்டார் ஆளுநர் அர்லேகர்!
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் மன்னிப்பு கோரினார்.
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்றது.

விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் தங்கப் பதக்கங்களையும் வழங்கினார்.
கொச்சியில் உள்ள கேரளா மீன்வளம் மற்றும் கடல் ஆய்வு பல்கலைக்கழகத்தின் நிறுவன துணைவேந்தர் மதுசூதன குரூப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணைவேந்தர் சந்திரசேகர் மற்றும் பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை மேற்கொண்டிருந்தனர்.
இந்த ஆண்டு மொத்தம் 37,877 மாணவ-மாணவிகள் பட்டம் பெற தகுதி பெற்றனர். இதில் 12,932 ஆண்கள் மற்றும் 24,945 பெண்கள் அடங்குவர்.
நேரடியாக ஆளுநரிடம் பட்டம் பெற 871 பேர் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 758 முனைவர் பட்டதாரிகள் (163 ஆண்கள், 595 பெண்கள்) மற்றும் 113 தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்கள் (12 ஆண்கள், 101 பெண்கள்) இடம்பெற்றனர்.
ஆனால் இதில் தங்கப் பதக்கம் பெற்ற 113 பேருக்கு மட்டும் ஆளுநர் நேரடியாக கையால் பதக்கம் வழங்குவார். மற்றவர்களுக்கு அதிகாரிகள் தரப்பில் பட்டம் வழங்கப்படும் என கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து காத்திருக்கும் முனைவர் பட்டம் பெற்ற மாணவிகள் அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். "சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து பட்டம் பெறுவதற்காக வந்திருக்கிறோம். ஆறு ஆண்டுகளாக இதற்காகத்தான் காத்திருந்தோம்.
ஆனால் இன்று பட்டம் கவர்னர் கையால் வாங்க முடியாது என்றால் நாங்கள் எவ்வாறு குடும்பத்திடம் பதில் சொல்வது, இந்த நாளுக்காக தான் காத்திருந்தோம். முதலில் எல்லாருக்கும் ஆளுநர் கொடுப்பார் என்றுதானே சொன்னார்கள். பிறகு எதற்காக தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு மட்டும் கொடுப்பதாக சொல்கிறார்கள். நாங்களும் அவர்களும் ஒரே கட்டணத்தைத்தானே படிப்புக்கு செலுத்தியிருக்கிறோம், பிறகு ஏன் எந்த பாகுபாடு" என கேள்வி எழுப்பி கண்ணீர் விட்டு அழுதனர்.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகிகள், ஆளுநரிடம் நேரில் பேசி மாணவிகளுக்கு சாதகமான முடிவெடுக்கிறோம் என கூறிச் சென்றனர். இதற்குள் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம் பரபரப்பானது. முனைவர் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் ஆங்காங்கே எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதனால் நிலைமை மோசமாவதை உணர்ந்த நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளிடம் அமைதி பேச்சு வார்த்தை நடத்தினர். அதே நேரத்தில் ஆளுநரிடம் பேசி அனைவரும் ஆளுநர் கையால் பட்டம் பெறுவதற்கான தகவலை உறுதி செய்த நிர்வாகிகள், கண்டிப்பாக ஆளுநர் கையால் அனைவருக்கும் பட்டம் வழங்கப்படும் என மேடையில் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அர்லேகர் பேசுகையில், ஆளுநர் அலுவலகத்திற்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையே தகவல் தொடர்பு பிரச்சனையால் இந்த சர்ச்சை ஏற்பட்டது. இது எப்படி நடந்தது என எனக்கு தெரியவில்லை.
பட்டமளிப்பு விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுத்த போதே துணை வேந்தரிடம் நான் எத்தனை மாணவர்கள் என கேட்டேன். அவரும் 871 பேர் என்றார். உங்களின் ஆற்றலையும் சக்தியையும் நான் ஏன் உதாசீனப்படுத்த வேண்டும்?
எல்லா மாணவர்களுக்கும் நானே என் கையால் பட்டத்தை வழங்குகிறேன். தங்கப்பதக்கம் பெற்றவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் என நான் சொன்னதாக தகவல் பரிமாற்றத்தில் தவறு நடந்துள்ளது. எதுவாக இருந்தாலும் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் அர்லேகர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
