நெல்லை கவின் வழக்கில் எஸ்ஐ தம்பதி மீதான குற்றச்சாட்டு ரத்தானது எப்படி? நீதிபதி கூறியது என்ன?
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கவின் என்ற இளைஞர் காதலித்துள்ளார் . இதனை அறிந்த அந்த பெண்ணின் தம்பி சுர்ஜித், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கவினை கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் சுர்ஜித், அவரது பெற்றோரான சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும், சுர்ஜித்துக்கு அடைக்கலம் கொடுத்ததாக குவாரி உரிமையாளர் ஜெயபால் என்பவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள். நெல்லை கவின் கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த கொலை வழக்கில் சுர்ஜித், சரவணன், ஜெயபால் ஆகிய 3 பேரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரியும் ஆஜரானார். சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன்-கிருஷ்ணகுமாரி உள்ளிட்டோர் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதில் கவினின் தாயார் தாக்கல் செய்த மனுவில், கவின் கொலை வழக்கு விசாரணை முறையாக நடக்கவில்லை. இதில் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சரவணன், கிருஷ்ணகுமாரி சார்பில் வக்கீல்கள் எஸ்.ஆனந்த், ராஜகுரு ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் வாதிடும் போது, சம்பவம் நடந்த இடத்தில் மனுதாரர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி இருந்ததாக குற்றம் சாட்டப்படவில்லை. இந்த கொலை நடந்த சில நிமிடங்களிலேயே மனுதாரர் சரவணன், தனது மகன்தான் இந்த கொலையை செய்தார் என சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தெரிவித்ததாக இறுதி அறிக்கையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே மனுதாரர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதாடினர்.
அரசு வக்கீல்கள் ஜான்சத்யன், சாமுவேல் குணசிங் ஆஜராகி வாதிடுகையில்., விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் அனைத்தும் மனுதாரர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி, ஜெயராஜ் ஆகியோர் மீது தீவிரமான சந்தேகத்தை எழுப்புகின்றன. சம்பவம் நடந்த பிறகு மனுதாரர்கள் நடந்துகொண்ட விதம், குற்றவாளிக்கு துணைபோகும் வகையில் அமைந்ததா என்பது விசாரணையின்போது தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயம் என்று வாதிட்டனர். மேலும் சம்பவத்துக்கு பயன்படுத்திய போலி பதிவு எண் கொண்ட வாகனத்தை மனுதாரர்கள் வழங்கி இருந்தனர். கவினை இந்த மனுதாரர்கள் ஏற்கனவே மிரட்டியதாக அவரது தாயார் தெரிவித்து இருக்கிறார். கொலை நடந்தபின்பு மனுதாரர் கிருஷ்ணகுமாரி 100 நாட்கள் தலைமறைவாக இருந்தது சந்தேகத்தை எழுப்புகிறது" என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் பிறப்பித்த உத்தரவில், " கொலை நடந்தபின்பு சுர்ஜித்தை, அவரது தந்தை சரவணன் சந்தித்து ஆடைகளை அழிக்கவும், செல்போனை சேதப்படுத்தவும், வாகன நம்பர் பிளேட்டை அகற்றவும் அறிவுறுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த சந்திப்பை நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை. மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகள், புகைப்படம், வீடியோ பதிவுகள் என எதுவும் இல்லை.
முதல் குற்றவாளி, மனுதாரர் மற்றும் மூன்றாம் குற்றவாளி ஆகியோருக்குச் சொந்தமான கைபேசிகள் சம்பவம் நடைபெற்ற போது ஒரே அலைபேசி கோபுரத்துடன் இணைக்கப்பட்டிருந்தன என்ற அடிப்படையில் சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இரு நபர்கள் ஒருவருக்கொருவர் உடனிருந்தனர் என்பதை செல் கோபுர இருப்பிடத் தகவல்கள் உறுதியாக நிறுவ முடியாது.மனுதாரர்கள் தொலைபேசியில் தன் மகளைத் தான் எச்சரித்துள்ளனர். சரவணன் இறந்தவருடன் பேசியதாக போலீஸார் சுட்டிக்காட்டும் தொலைபேசி உரையாடல் சம்பவ நாளிலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.
மனுதாரர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் வெறும் அனுமானத்தின் அடிப்படையிலேயே இருக்கின்றன. சாதிப்பெயர் எதையும் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படவில்லை. பள்ளிப்பருவத்தில் ஒரு பழக்கத்தில் ஈடுபடும் மகனையோ அல்லது மகளையோ பெற்றோர் கண்டிப்பது இயல்பானதுதான்.
எனவே சாதி குறித்த குறிப்பு, அவமதிப்பு நடவடிக்கைகள் நடந்ததாக எங்கும் கூறப்படவில்லை. இந்த சம்பவத்தில் முன்கூட்டியே திட்டமிடல், கூட்டுச்சதி இருந்ததாக அரசு தரப்பு குற்றம் சாட்டவில்லை. எனவே இந்த வழக்கில் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் பிரிவு 3 (2) (v) -ஐ பயன்படுத்துவதற்கான தேவை கிடையாது. மனுதாரர்கள் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்படுகிறது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால் இந்த தீர்ப்பு அதனை கட்டுப்படுத்தாது. சுர்ஜித்துக்கு அடைக்கலம் கொடுத்ததால் ஜெயபாலின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
