நெல்லையில் அதிர்ச்சி! 50 பவுன் நகையுடன் ஆட்டோவில் சென்ற மனைவி, மகன் மாயம்! கணவர் கண்ணீர் புகார்
நெல்லை: நெல்லை மேலப்பாளையத்தில் மகனின் பிறந்தநாளை தனது சகோதரர் வீட்டில் கொண்டாடிவிட்டு 50 பவுன் நகையுடன் தனது வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பிய மனைவி, 7 வயது மகனை காணவில்லை என நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கணவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
நகைப் பணத்திற்காக மனைவி மற்றும் மகனை கொலை செய்து விட்டார்களா என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறாம்பண்ணையைச் சேர்ந்த முகமது சாலி (35) என்பவர் அபுதாபியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா சம்சானா அப்ரிஸ் (28). இவர்களுக்கு முகமது சயான் (7) என்ற மகன் உள்ளார்.
திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த அக்டோபர் 1-ம் தேதி நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள தனது சகோதரர் முகமது ரியாசுதீன் வீட்டிற்கு மகனை அழைத்துக் கொண்டு சம்சானா சென்றுள்ளார்.
அப்போது தனது வீட்டில் வைத்திருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தையும் எடுத்துச் சென்றாராம். அங்கு மகனின் பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, கடந்த அக்டோபர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு சகோதரர் குடும்பத்தினரிடம், தனது வீட்டுக்குச் செல்வதாக சம்சானா தெரிவித்தாராம்.
இதையடுத்து அபுதாபியில் உள்ள கணவர் முகமது சாலிக்கிற்கு போன் மூலம் சம்சானா பேசுகையில், மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியதாகவும், தற்போது வீட்டிற்கு செல்லவிருப்பதாகவும் தெரிவித்தாராம். இதையடுத்து ஆறாம்பண்ணையில் உள்ள தனது வீட்டிற்கு சம்சானா தனது மகனுடன் ஆட்டோவில் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். கூடவே 50 பவுன் நகைகளையும் கொண்டு சென்றாராம்.
அதன் பின்னர் அவர்கள் இருவர் குறித்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போதும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சகோதரர் குடும்பத்தினரும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.
இதுகுறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் நிலையத்திற்கு போய் கேட்டாலும் அங்கு அலட்சியப்படுத்துவதாக முகமது சாலி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
தனது மனைவி, மகனை யாராவது நகைக்காக கடத்திச் சென்று கொன்று விட்டனரா என்ற சந்தேகம் இருப்பதாகவும் அந்த புகாரில் முகமது சாலி குறிப்பிட்டுள்ளார். எனவே நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாயமான தனது மனைவி, மகனைக் கண்டுபிடித்து மீட்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற சம்சானா, எதற்காக 50 பவுன் நகைகளை கொண்டு சென்றார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பூட்டிய வீட்டில் வைத்தால் திருடு போய்விடும் என்ற அச்சம் இருந்திருந்தால் வங்கி லாக்கரில் வைத்திருக்கலாம். இல்லாவிட்டால் தனது சகோதரர் வீட்டிலேயே வைத்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு ஆட்டோவில் தனியார் சிறுவனுடன் எதற்காக அந்த நகைகளை கொண்டு வர வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 12 ஆம் தேதி நள்ளிரவு முதல் செஞ்சியை சேர்ந்த 7 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது நெல்லையில் மனைவியும் மகனும் 23 நாட்களாக காணவில்லை என்று கணவர் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




Click it and Unblock the Notifications
