சாத்தான்குளம் காதல் விவகாரம்! இளைஞர் வெறிச் செயல்! சிறுமியின் தாயை தொடர்ந்து தந்தையும் மரணம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே காதல் விவகாரத்தில் பரோட்டா மாஸ்டர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் சிறுமியின் தாய் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சாத்தான்குளம் அருகே முதலூரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (50). அவரது மனைவி மேரி ரெஜிலா (39). இவர்களது 15 வயது மகளை, ஞானபிரகாஷ் என்கிற பரோட்டா மாஸ்டர் காதலித்து வந்தாராம்.

இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஞான பிரகாஷ், நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த போது முத்துக்கிருஷ்ணனின் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலில் தாய் மேரி ரெஜிலா அதே இடத்திலேயே உயிரிழந்தார். அவர் மீதான தாக்குதலை தடுக்க முயன்ற முத்துக்கிருஷ்ணன், 10 வயது மகன் பிளசெட் ராஜா ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததில் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து வீட்டில் இருந்த இரு மகள்களையம் ஞானப்பிரகாஷ் கடத்திச் சென்றாராம். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தட்டார்மடம் போலீஸார், ஞானபிரகாஷை தேடி, ஆனந்தபுரம் பகுதியில் பூட்டப்பட்டிருந்த அறையில் இருந்த இரு சிறுமிகளையும் பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ஞானப்பிரகாஷையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கு இரட்டை கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
