போரூர் - வடபழனி இடையே ஆறு ரயில் நிலையங்கள் திறப்பு எப்போது.. காலக்கெடுவை தவறவிட்ட சென்னை மெட்ரோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூந்தமல்லி - வடபழனி வழித்தடம் பயன்பாட்டிற்கு வந்தாலும், போரூர் மற்றும் வடபழனி இடையே உள்ள 6 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் காலக்கெடு முடிந்து சுமார் 10 மாதங்களாகியும் நிறைவடையாமல் இருக்கிறது. இந்த ரயில் நிலையங்கள் 2027 மார்ச் மாதத்தில்தான் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இருக்கிறதாம்.இதனால் அந்த பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் போரூர் மற்றும் வடபழனி இடையே உள்ள எந்த ரயில் நிலையத்திலும் மெட்ரோ ரயில்கள் நிற்காமல் சென்று வருகிறது.இங்கு கட்டுமான பணிகள் முடியாத காரணத்தால், ரயில் வசதி இருந்தாலும், அதில் பயணிக்க முடியாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, ஆலப்பாக்கம், விருகம்பாக்கம், வளசரவாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Chennai Metro

இந்நிலையில், இந்த ஆறு ரயில் நிலையங்களிலும் கட்டுமானப் பணிகள் ஜனவரி மாதத்தில் நிறைவடையும் என்றும், சிக்னல் அமைக்கும் பணிகளை முடிக்க மேலும் இரண்டு மாதங்கள் தேவைப்படும் என்றும் மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறினார் ஆனால், சிக்னல் அமைக்கும் பணிகளைக்கூட 2027 மார்ச் மாதத்திற்குள் முடிப்பது கடினம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ரயில்வே பாதுகாப்பு ஆணையத்திடம் அனுமதி நீட்டிப்பு கோரும் மெட்ரோ

இந்தத் தாமதத்தின் காரணமாக, போரூர் - வடபழனி வழித்தடத்திற்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக இயக்க அனுமதியை நீட்டிக்குமாறு ரயில்வே பாதுகாப்பு ஆணையத்திடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் வேகக் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது.

ஆனால், போரூர் - வடபழனி வழித்தடத்தில் சில பணிகள் முழுமையாக நிறைவடையாததால், தற்காலிக அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் ரயில்கள் கையேடு முறையில் இயக்கப்பட வேண்டும் என்றும், மணிக்கு 40 கி.மீ. வேகத்திற்கு மிகாமல் இயக்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

அக்டோபர் 31-ம் தேதியுடன் முடியும் அனுமதி

கடந்த மே மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட கடிதத்தில், நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளையும் முடித்த பிறகு, நிரந்தர அனுமதி பெறுவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மீண்டும் தங்களை அணுக வேண்டும் என்று கூறியிருந்தது. மேலும், இந்தத் தற்காலிக அனுமதி 2026 அக்டோபர் 31-ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் போரூர் - வடபழனி வழித்தடத்தில் உள்ள 6 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் தாமதமாகி வருவதால், இந்தத் தற்காலிக அனுமதியை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கக் கோர சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்கள்:

1. ஆலப்பாக்கம்
2. கரம்பாக்கம்
3. வளசரவாக்கம்
4. ஆழ்வார்திருநகர்
5. சாலிகிராமம் வேர்ஹவுஸ்
6. சாலிகிராமம்

தேர்தலால் தொழிலாளர் பற்றாக்குறை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நடைபெற்ற தேர்தல் காரணமாகக் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான தொழிலாளர்கள் கிடைப்பதில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. அதன்பிறகு தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு சவாலான சூழ்நிலைகளுக்கு இடையிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

குறிப்பாக, ஆலப்பாக்கம் மற்றும் ஆழ்வார்திருநகர் இடையே நடைமேடை மற்றும் பயணிகள் கூடம் அமைப்பது மிகவும் சவாலான பணியாக இருந்தது. ஏனெனில், இது இரட்டை அடுக்கு வழித்தடமாகும். இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது வழித்தடங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக இணையாகச் செல்கின்றன. இந்த 6 ரயில் நிலையங்களிலும் நடைமேடை அமைக்கும் பணிகளில் சுமார் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது பயணிகள் கூடம் மற்றும் ரயில் நிலையங்களின் நுழைவு, வெளியேறும் பகுதிகளை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தி வருகிறோம்" என்றார்.

கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகும் சிக்னல் அமைக்கும் பணிகளை நிறைவு செய்ய மேலும் இரண்டு மாதங்கள் தேவைப்படும் என்று சொல்கிறார்கள். சிக்னல் அமைக்கும் பணிகளை 2027 மார்ச் மாதத்திற்குள் முடிப்பதே மிகவும் கடினமாக இருக்கும். எனவே, இந்த 6 ரயில் நிலையங்களின் திறப்பு மேலும் தாமதமடைய வாய்ப்பு உள்ளதாம். எனவே ஆற்காடு சாலையில் கட்டப்பட்டு வரும் இந்த 6 மெட்ரோ ரயில் நிலையங்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதமே பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+