காவல் நிலையத்தின் தவறு அது.. கலையரசன் கைது விவகாரம்.. சாதாரணமாக விளக்கம் கொடுத்த நிர்மல் குமார்!
சென்னை: பொருளாதார நிபுணர் கலையரசன் கைது தொடர்பாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார். அது காவல் நிலையத்தின் தவறு என்று கூறிய சிடிஆர் நிர்மல்குமார், அவரின் பெயர், புகைப்படத்துடன் கமெண்ட் பார்த்ததும் அவரின் முகவரியை கண்டறிந்து போலீசார் சென்றுவிட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில் பேராசிரியராக பணியாற்றி கொண்டிருக்கும் கலையரசன் காவல்துறையினராக் அதிகாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டு 7.30 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளார். சீருடை இல்லாத காவல்துறையினரால் நிர்பந்தமாக அழைத்து செல்லப்பட்டு, அவரின் செல்போனை பறித்து அலைகழித்து மீண்டும் வீட்டில் இறக்கிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்த பேராசிரியர் கலையரசன், ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கில் பல்லாவரம் எல்எல்ஏ குறித்து அவதூறு பதிவிடப்பட்டிருந்ததாகவும், அதில் அவரது புகைப்படம் இருந்ததாகவும், அதனால் விசாரணைக்கு அழைத்து செல்வதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கலையரசனின் கைது ஸ்டாலின், சீமான், கனிமொழி, பெ.சண்முகம், திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பேசுகையில், லோக்கல் காவல் நிலையத்தால் நடந்த தவறு அது.. நானும் அவருடனும் பேசிவிட்டேன். காலை 5.30 மணிக்கு எனக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக காவல் ஆணையரிடம் பேசினேன்.
கலையரசன் பெயர், புகைப்படம் போட்டு எம்எல்ஏ தொடர்பாக ஒரு தவறான கமெண்ட் பதிவிடப்பட்டிருந்தது. அவரின் பெயர், புகைப்படத்துடன் கமெண்ட் பார்த்ததும் அவரின் முகவரியை கண்டறிந்து போலீசார் சென்றுள்ளனர். அதனால் லோக்கல் காவல் நிலையத்தில் இருந்து சென்று விசாரணைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள்.
உடனடியாக நானும் அவருடன் பேசினேன். தவறு நடந்துவிட்டதாகவும் கூறினோம் என்று விளக்கம் அளித்துள்ளார். சாதாரணமாக ஒரு சம்மன் அனுப்பியோ அல்லது தொலைபேசியில் அழைத்தோ கூட விசாரணை நடத்தி இருக்கலாம். ஆனால் அதிகாலையில் சென்று போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.



Click it and Unblock the Notifications
