திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் ரயிலை கல்லிடைக்குறிச்சியில் நிறுத்தாத டிரைவர்.. பாடம் புகட்டிய மக்கள்
திருநெல்வேலி: திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது. இதையடுத்து ரயிலை நிறுத்தாமல் சென்ற என்ஜின் டிரைவர்களை பணியிடை நீக்கம் செய்து கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஞாயிற்றுகிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் (வ.எண். 06030) ரயிலானது அம்பாசமுத்திரம்,பாவூர்ச்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை,திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக மறுநாள் (திங்கட்கிழமை) காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

மறுமார்க்கம் திங்கட்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் (வ.எண்.06029) ரயிலானது மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 7.45 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்தடைகிறது. இந்த வாராந்திர சிறப்பு ரயில் இந்த மாதமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாராந்திர சிறப்பு ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தினசரி இந்த ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில் இந்த ரயிலில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து கடந்த ஜூலை 6-ம் தேதி கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்திருந்தார்கள். ஆனால், அந்த ரயில் அன்றைய தினம் கல்லிடைக்குறிச்சியில் நிற்காமல் சென்று விட்டது.
பயணிகள் கூச்சல் போட்டும் அந்த ரயில் நிற்காமல் சென்றதால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இது குறித்து அந்த ரயிலில் பணியில் இருந்த கார்டு, என்ஜின் டிரைவர் மற்றும் உதவி டிரைவர் ஆகியோருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்தும் ரயிலை என்ஜின் டிரைவர்கள் நிறுத்தாமல் சென்றுவிட்டதாக புகார் எழுந்தது. இதனால் அவதி அடைந்த பயணிகள் ரயில் நிலையத்தினை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் கல்லிடைக்குறிச்சியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லுமாறு மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு இரவு 8.50 மணிக்கு வந்த செங்கோட்டை ரயிலில் மேட்டுப்பாளையம் ரெயிலில் செல்லும் பயணிகள் தென்காசிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல, தென்காசியில் என்ஜின் மாற்றும் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் ரெயிலையும் செங்கோட்டை ரயில் வந்த பிறகு இயக்குவதற்கும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதனால் கல்லிடைக்குறிச்சி பயணிகள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக தென்காசியில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்டு சென்றார்கள். இந்த சம்பவம் குறித்து கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர், முதுநிலை இயக்க மேலாளர் மற்றும் முதுநிலை எலக்ட்ரிகல் என்ஜினீயர் (ரெயில் பாதை) ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தியது.
அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், நெல்லை-மேட்டுப்பாளையம் ரயில் என்ஜின் டிரைவர் விஷ்ணு, மூத்த உதவி டிரைவர் சண்முகவேலாயுதம் ஆகியோரை நேற்று பணியிடை நீக்கம் செய்து கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வஸ்தவா உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications