நெல்லை கவின் ஆணவக் கொலை.. வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்.. அதிரடி காட்டிய தமிழக அரசு
நெல்லை: நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கு (Nellai Kavin's honor killing case) சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விசாரணை பாரபட்சமின்றியும், வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையிலும், வழக்கின் தன்மை முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவினின் தாயார் தந்த புகாரின் படி 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லை பாளையங்கோட்டையில் கடந்த 27 ஆம் தேதி காதல் விவகாரத்தில் தூத்துக்குடியை சேர்ந்த செல்வ கணேஷ் என்ற ஐடி என்ஜினீயர், சுர்ஜித் என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் தன் அக்காவிடம் பழகக் கூடாது என்று பலமுறை கூறியும், தொடர்ந்து பழகி வந்ததால் அன்றைக்கு மருத்துவமனை வெளியே மரத்தடியில் வைத்து வெட்டி கொலை செய்தார்.

நெல்லை பாளையங்கோட்டையில் கொலை
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சுர்ஜித் போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கவினின் உடலை குடும்பத்தினர் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுர்ஜித்தின் பெற்றோர்களான போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் சரவணன் - கிருஷ்ணகுமாரி தம்பதியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் செய்தனர்.
இதையடுத்து சரவணன் கிருஷ்ணகுமாரி தம்பதி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பட்டியல் இன சமூகத்தை சேர்ந்தவர் தன் அக்காவிடம் தொடர்ந்து பேசி வந்ததால் சுர்ஜித் கொலை செய்துள்ளதாகவும், இதற்கு அவர்கள் தாய் தந்தை உடந்தை என்றும், காதலித்தாரா நட்புடன் பழகினாரா என்று தெரியாமலேயே இந்த கொலை நடந்து இருப்பதாகவும் இது ஆணவக் கொலை தான் என்றும் கவினின் உறவினர்கள் தெரிவித்து வந்தது.
சிபிசிஐடிக்கு மாற்றம்
இந்த நிலையில் இன்று சுர்ஜித் மீது குண்டாஸ் வழக்கு பதியப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்த வழக்கானத் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறபட்டிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. கவின்செல்வகணேஷ் த/பெ சந்திரசேகர் என்பவர் கடந்த 27.07.2025 அன்று. திருநெல்வேலி மாநகரில் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக, இறந்த கவின்செல்வகணேஷின் தாயார் கொடுத்த புகார் மனுவின் மீது பாளையங்கோட்டை காவல் நிலைய குற்ற எண்.396/2025 சட்டப் பிரிவுகள் 296(b), 49, 103(1) BNS உ.இ சட்ட பிரிவுகள் 3(1)(I), 3(1)(s), 3(2)(v) தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் தாயார் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
குண்டர் தடுப்பு சட்டம்
முதற்கட்ட விசாரணையில் கொலைசெய்யப்பட்டவரும். குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் சகோதரியும் பழகி வந்த நிலையில், இது தொடர்பான பிரச்சனையில் இந்த கொலை நடந்துள்ளதாகத் தெரியவருகிறது. குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் அதே நாளில் (27.072025) கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் அவர் மீது இன்று (30.07.2025) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர். விசாரணை பாரபட்சமற்றதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக இவர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும். சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக, இந்த வழக்கு குற்றப்பிரிவு. குற்றப் புலனாய்வுத்துறை(CBCID) க்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications