"விசில்" நம் தேசிய கீதம்.. மேடையில் ஓப்பனாக பேசிய ஓ.பன்னீர்செல்வம்
திருநெல்வேலி: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் விஜய்யின் தவெக சின்னத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவில் இணைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விசில் தான் நம் தேசிய கீதம் என்று பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், "இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சி கண்ட மாநிலம் தமிழ்நாடு தான் என்கிற நிலையை தளபதி உருவாக்கியுள்ளார். மத்திய அரசு உரிய நிதியை அளிக்காவிடினும் தமிழக நிதி ஆதாரத்தை வைத்து பல்வேறு திட்டங்களை தளபதி நிறைவேற்றியுள்ளார். இங்கு வந்துள்ள அனைவரின் முகங்களிலும் ஒரு மலர்ச்சியை காண்கிறேன். தேர்தல் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

நான் செய்த தவறு
தேர்தல் அறிவிப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே தேர்தல் கால பணிகளை நிறைவாக செய்துள்ளீர்கள். நாளை தேர்தல் வந்தால் கூட சந்திக்குமளவுக்கு தயாராக உள்ளோம். உலகை ஆளும் 9 கோள்களில் யாராலும் வெல்ல முடியாதது சூரியன். அப்படித்தான் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகம்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். எனது ஆதரவு எம்எல்ஏக்கள் 11 பேரின் ஆதரவால் வெற்றி பெற்று தீர்மானம் நிறைவேறியது. அன்றைக்கு எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தது நான் செய்த தவறு. விபத்தின் மூலம் சசிகலாவால் முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி" என்றார்.
விசில் தேசிய கீதம்
அப்போது விசில் சத்தம் அதிகளவு ஒலித்தது. அதற்கு ஓ. பன்னீர்செல்வம், "தொடர்ந்து அங்கு விசில் சத்தம் கேட்டு கொண்டிருக்கிறது. இந்த விசில் தான் ஆதிகாலத்தில் இருந்து நம் தேசிய கீதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. விசில் சத்தம் கேட்டாலே நாம் அனைத்துத் தேர்தல்களிலும் மாபெரும் வெற்றி அடைவோம் என்பது உறுதி" விசில் குறித்து ஓபிஎஸ் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications